கேரளாவின் மீடியா ஒன் டிவி சேனலுக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 5 ) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்றுள்ளது.
கேரளாவின் மீடியா ஒன் டிவி மலையாள செய்தி சேனல் ஒளிபரப்புக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது.
Madhyamam Broadcasting Ltd நிறுவனத்தின் மீடியா ஒன் சேனலுக்கு 10 ஆண்டுகால ஒளிபரப்பு உரிமம் வழங்கியது மத்திய அரசு. இந்த ஒப்பந்தம் 2021 செப்டம்பர் மாதம் காலாவதியானது. முன்னதாக உரிமத்தை புதுப்பிக்க கோரியிருந்தது மீடியா ஒன் சேனல். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்காமல் சேனல் ஒளிபரப்புக்கு தடை விதித்தது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக கேரளா உயர்நீதிமன்றத்தில் மீடியா ஒன் சேனல் ஆசிரியர் பிரமோத் ராமன் சார்பில் முதலில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றமானது, நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது; ஆகையால் மீடியா ஒன் குழுமத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்வதாக தெரிவித்தது.
கேரளா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மீடியா ஒன் சேனல் மற்றும் கேரளா பத்திரிகையாளர்கள் சங்கம் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இவ்வழக்கில் நேற்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், கேரளா உயர்நீதிமன்றத்தின் கருத்தை விமர்சித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து கருத்துகளை முன்வைத்தது.
அதாவது நாட்டின் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி கேரளா உயர்நீதிமன்றம் நியாயப்படுத்தியதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மறுக்கவும் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவது பத்திரிகைகளின் கடமை என்றும், ஊடகங்கள் விமர்சிக்கும் கருத்துக்களை நாட்டிற்கு எதிரானது என்று கூற முடியாது என்றும் அத்துடன் ஊடகங்களின் பணிகளை அனுமதிக்க வேண்டிய அவசியத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இறுதியாக மீடியா ஒன் செய்தி சேனலுக்கு மத்திய பாஜக அரசு தடையை நீக்கியும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்கள் – பத்திரிகைகள் பல்வேறு வகைகளில் அச்சுறுத்தப்படும் சூழலில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது .
சென்னை பத்திரிகையாளர் மன்றம் இந்த தீர்ப்பை வரவேற்கிறது. இந்த தீர்ப்பை ஆட்சி அதிகாரங்களில் உள்ளோர் சரியான முறையில் புரிந்து கொண்டு அதிகார பலத்தினால் ஊடகங்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் இத்தருணத்தில் வலியுறுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிபிஐ, அமலாக்கத் துறை.: 14 எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி!
வெளியானது ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் ஸ்னீக் பீக்!
