நிலநடுக்கத்திற்கு இடையே தாய் இறந்து பிறந்த குழந்தை, இடிபாடுகளில் இருந்து பாதி உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன் மற்றும் உயிரிழந்த மகளின் கையை பற்றி அழும் தந்தை என இதயத்தை நொறுக்கும் இறுக்கமான காட்சிகள் சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் கொடூர முகத்தை காட்டி வருகின்றன. புதன்கிழமை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 6ம் தேதி அதிகாலையில் அமைதியான தூக்கத்தில் இருந்து உலகம் எழுந்தது. ஆனால் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தென்கிழக்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவின் எல்லை பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வாழ்ந்த மக்களின் உயிரை தூக்கத்திலேயே பறித்து கொண்டது.
6ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அருகிலுள்ள லெபனான், சைப்ரஸ், கிரீஸ், இஸ்ரேல், எகிப்து மற்றும் பாலஸ்தீனப் பகுதிகள் வரையும் உணரப்பட்டது. அதனைதொடந்து 7 புள்ளி ரிக்டர் அளவுகளுக்கும் மேலாக கடந்த 3 நாட்களில் 310க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் துருக்கி, சிரியாவில் உணரப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தில் தப்பி பிழைத்து ஏற்கெனவே அங்கு நடுங்கி கொண்டிருக்கும் மக்களை மழையும், கடும்பனியும் வதைக்கின்றன.
உறைபனிக்கு நடுவே தான் மலைபோல் குவிந்து கிடக்கும் இடிந்த கட்டிடங்களில் இருந்து உடல்களையும், உயிர் பிழைத்தவர்களையும் கடும் சிரமத்துடன் மீட்டு வருகின்றனர் 65க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மீட்பு படையினர்.
அதிகாரப்பூர்வமாக, தற்போது வரை துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,647 என மொத்தம் 11,200க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் உலக சுகாதார அமைப்பு இறப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டும் என்றும் நிலநடுக்கத்தால் சுமார் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
5ம் தேதி இரவில் தங்களுக்கு அருகே படுத்து இருந்தவர்கள், 6ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிருடன் இருக்கிறார்களா? உயிர் பிழைத்திருந்தால் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாத சூழ்நிலையே துருக்கியில் நிலவுகிறது.
மீட்கப்பட்ட குழந்தைகள் கடும்பனியையும் தாண்டி தாய், தந்தை, சகோதரன், சகோதரி என உடன் இருந்தவர்களை இழந்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். உயிர் பிழைத்தவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே உள்ளது.
இடைவிடாத நில அதிர்வுகள், குளிர் மழை போன்றவற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பள்ளிகள், மசூதிகள் மற்றும் பேருந்து, ரயில், விமான நிலையங்களில் பலர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பூகம்ப மண்டலத்தில் அமைந்துள்ள துருக்கி
2.5 அல்லது அதற்கும் குறைவான நிலநடுக்கம் ஏற்பட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதே வேளையில், 7 புள்ளிக்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கங்கள் “பெரிய நிலநடுக்கம்” என வகைப்படுத்தப்படுகின்றன, இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். துருக்கி – சிரியா எல்லையில் தற்போது அதுதான் நிகழ்ந்துள்ளது.
துருக்கியில் பூகம்பங்கள் அரிதானவை அல்ல. உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்று தான் துருக்கி.
இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், பல தசாப்தங்களுக்கு பிறகு துருக்கியைத் தாக்கிய மிகப்பெரிய மற்றும் ஆபத்தான நிலநடுக்கமாக இது அமைந்துள்ளது.
துருக்கியின் எர்சின்கான் மாகாணத்தில் 1939 ஆம் ஆண்டில் 33,000 பேரை பலிவாங்கிய நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது மிகப்பெரிய அளவில் நிலநடுக்கத்தை துருக்கி சந்தித்துள்ளது.
சிரியாவில் நிலநடுக்க பாதிப்பு
சிரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரினால் வடமேற்கு மாகணங்களில் அந்த நாட்டை சேர்ந்தவர்களே உள்நாட்டு அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கெனவே தங்களை உரிமைகளை இழந்து அகதிகளாக நிற்கும் அப்பகுதி மக்களின் உடமைகளையும் பறித்துள்ளது இந்த நிலநடுக்கம்.
சிரியாவின் வடமேற்கு பகுதியில் மட்டும் குறைந்தது 400க்கும் அதிகமான கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டன. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிரியாவின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட வடமேற்குப் பகுதியில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உதவியை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
மேம்பாடு அடையாத துருக்கி கட்டுமானம்
துருக்கியின் பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் சங்கம் (TMMOB) நீண்ட காலமாக நாட்டில் நிலநடுக்கத்துக்கு தகுந்தவாறு உள்கட்டமைப்பு இல்லாதது குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
துருக்கியில் 1999ம் ஆண்டு தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் சுமார் 17,000 பேர் இறந்த நிலையில், அப்போதைய அரசாங்கம் நாட்டில் தரமான புதிய கட்டுமானங்களை உருவாக்குவதற்கும், இருக்கும் கட்டிடங்களை வலுப்படுத்துவதற்கும் உறுதியளித்தது.
எனினும் நிலநடுக்கத்தை மையமாக வைத்து தற்போது வரை துருக்கியில் உள்கட்டுமானத்தில் எந்தவிதமான முயற்சியும், வளர்ச்சியும் மேற்கொள்ளபடாததே தற்போதைய பெருந்துயரத்திற்கு காரணம்.
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, “பூகம்பத்திற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதில் துருக்கி தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது” என்று அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளின் உதவி!
அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட 65க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,294 மீட்பு படைகள் துருக்கி மற்றும் சிரியாவில் நிவாரண உதவி புரிந்து வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யுமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
சிரிய செஞ்சிலுவைச் சங்கம் மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதாரத் தடைகளை நீக்கி உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துருக்கிக்கு தேவையான மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சீனா 6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியுடன், தனது நாட்டின் மீட்பு படையையும் துருக்கிக்கு அனுப்பியுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய பேரிடர் மேலாண் படையைச் சேர்ந்த 101 வீரர்கள் அடங்கிய 2 குழுக்கள் விமானப்படையின் சி17 விமானம் மூலம் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை கண்டுபிடிக்கும் நவீன கருவிகள் மற்றும் இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் விமானம் மூலம் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுபோல செக் குடியரசு, பிரான்ஸ், மால்டா, நெதர்லாந்து, போலந்து, அல்ஜீரியா, இத்தாலி, மால்டோவா, அல்பேனியா, இஸ்ரேல், உஸ்பெகிஸ்தான், ஹங்கேரி, ஜெர்மனி, செர்பியா, ஸ்லோவாக்கியா, கத்தார், பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் துருக்கியில் மீட்பு பணியை தீவிரபடுத்தியுள்ளன.
பூகம்ப அபாயத்தில் ஒவ்வொரு முறை சிக்கும் துருக்கியில், தேர்தலின் போது இந்திய அரசியல்வாதிகள் வெளியிடும் வெற்று வாக்குறுதிகள் போல உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து உறுதி அளிக்கப்படுகிறது. பின்னர் மறக்கப்படுகிறது. அந்த மறதியே இப்பெருந்துயருக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பின் வீரியத்தை உணர்ந்தாவது வரும் காலங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் உட்கட்டமைப்பை பூகம்ப பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் துருக்கி அரசு மேம்படுத்த வேண்டும். இது தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாடு செலுத்தும் அஞ்சலியாகவும், தப்பி பிழைத்த மக்களுக்கு காட்டும் ஆறுதலாகவும் அமையும்.
கிறிஸ்டோபர் ஜெமா
2 கைக்குழந்தைகள் உட்பட 4 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!
அதிமுகவில் சாதி யுத்தம்: ’புதிய’ பன்னீர் செல்வத்தின் சிங்கப் பாதை?