மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசு ஹாங்காங் நகரில் உள்ள அனைத்து சுகாதார பாதுகாப்பு மையங்களிலும் 16 வகையான கருத்தரிப்பு தொழில்நுட்ப சிகிச்சைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 1980-களில் அந்நாட்டின் மக்கள் தொகை அரசுக்குக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தவே, திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டது.
அதனால் பிறப்பு விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டு இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
சீன நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பே முக்கியம் என்பதால் 2021-ம் ஆண்டு முதல், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் வரையிலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது.
ஆனால் குழந்தை வளர்ப்பு செலவு, கல்வி, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களினால் சீனர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்த்து வந்தனர்.
இந்த நிலையில் சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
மகப்பேறு கால விடுமுறையில் ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாட்கள் விடுப்பு, இளைஞர்களுக்கு காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறை எனப் பல விஷயங்களை அள்ளித் தெளித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தற்போது புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல், ஹாங்காங் நகரில் உள்ள அனைத்து சுகாதார பாதுகாப்பு மையங்களிலும் 16 வகையான கருத்தரிப்பு தொழில்நுட்ப சிகிச்சைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்-விட்ரோ கருத்தரித்தல், கரு மாற்று அறுவை சிகிச்சை, கரு உறைதல் மற்றும் விந்துவை சேமித்தல் ஆகிய 16 வகையான சேவைகள் இனி அரசின் சுகாதார மையங்களிலேயே வழங்கப்படும் என பெய்ஜிங்கின் முனிசிபல் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பீரோவின் துணை இயக்குநர் டு சின் கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாது சில தனியார் மருத்துவமனைகளுக்கும் IVF சிகிச்சை முறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணமாகாத பெண்களும் தங்கள் கருமுட்டைகளை சேமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதா செந்தில் பாலாஜி வழக்கு?