திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த சிறுவனை தூக்கிச் சென்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.
கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஆந்திர மாநிலம் அதோனியை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் எழுமலையானை வழிபடுவதற்காக அலிபிரி – திருமலை நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏழாவது மைலில் ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியை தாண்டி சிறிது தூரம் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது பெற்றோர்கள் வேகமாக முன்னால் சென்றுவிட 5 வயது சிறுவனான கௌஷிக் மெதுவாக தாத்தாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது யாருமே எதிர்பாராத விதமாக மனதை பதைபதைக்க வைக்கின்ற வகையில் ஒரு சிறுத்தை திடீரென்று கௌஷிக்கை வாயால் கவ்விக் கொண்டு ஓடியது.
இதனைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து கூச்சலிட்டுக் கொண்டே சிறுத்தையை துரத்தினர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் சிறுத்தையை துரத்தினர். பொதுமக்கள் துரத்தி வருவதைக் கண்ட சிறுத்தை சிறுவனை கீழே போட்டுவிட்டு மின்னல் வேகத்தில் வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டது.
சிறுத்தை தூக்கி சென்றதில் சிறுவன் கௌஷிக்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருப்பதி ஸ்வின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிறுவன் கௌஷிக் நலமுடன் இருக்கிறார்.
இதன் எதிரொலியாக பக்தர்கள் குழுவாகத்தான் செல்ல வேண்டும். தனித்தனியாக செல்லக் கூடாது என்று திருப்பதி தேவஸ்தானம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனிடையே தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
வனப்பகுதிக்குள் தப்பி சென்ற சிறுத்தையை பிடித்து வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கையும் மேற்கொண்டனர்.
சிறுத்தை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் அதனை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் நேற்று (ஜூன் 23) நள்ளிரவு சிறுத்தை சிக்கியுள்ளது.
சிறுத்தையை மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
மோனிஷா
“இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு” – சுந்தர் பிச்சை
அமித்ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்!