கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, மேப்பாடி,முண்டக்கை பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் பரிதாபமாக இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
தற்போது, ஏராளமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் 9 முதல் 15 பேர் வரை பலரும் இழந்து தவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எஞ்சியிருக்கும் மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நாட்டின் பல முனைகளில் இருந்து இந்த மக்களுக்கு உதவிக்கரம் நீண்டாலும், தனியாக வாங்கிய வங்கிக்கடன்களை எப்படி அடைப்பது என்கிற எண்ணத்துடன் லோன் வாங்கியவர்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், மக்களின் பரிதாப நிலையை உணர்ந்து கேரள வங்கி தங்களது சூரல் மலை கிளையில் லோன் வாங்கிய அனைவரின் லோனையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கேரள வங்கி முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் வழங்கியது. கேரள வங்கியின் ஊழியர்களும் தங்களின் 5 நாள் சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் அதிகாரப்பூர்வமாக 229 பேர் பலியாகியுள்ளனர். 130 பேர் மாயமாகியுள்ளனர். 51 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை. தற்போது , அங்கு அமைக்கப்பட்டுள்ள 15 முகாம்களில் 1770 மக்கள் தங்கியுள்ளனர். இதில், 439 குழந்தைகளும் 673 பெண்களும் அடங்குவார்கள்.
இதற்கிடையே, கேரள மாநிலத்தை இன்னும் மழை பயமுறுத்தி கொண்டுதான் இருக்கிறது. அங்குள்ள இடுக்கி, மலப்புரம் மாவட்டத்துக்கு ஆரங்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 7 முதல் 11 செ.மீ அல்லது 11 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-எம்.குமரேசன்