வெளிநாடு போகாதவருக்கு குரங்கம்மை தொற்று: இந்தியாவில் எச்சரிக்கை!

Published On:

| By admin

இன்று ( ஜூலை 24 ) டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஜூலை 10 அன்று கேரளா வந்த ஒருவருக்கு, ஜூலை 14 அன்று  குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நபருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவுகள் அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பதை உறுதி செய்தது.

இதனை தொடர்ந்து குரங்கம்மை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதித்துப் பார்த்த பிறகே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டது.

தற்போது கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி மவுலானா ஹாசாக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று அந்த நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு செல்லாதவர் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகளவில் 75 நாடுகளில் 16,000 த்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனால் குரங்கம்மையை மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

கொரோனாவை போல் குரங்கம்மையும் பெறுந்தொற்றாக மாறும் அபாயம் இருப்பதால் நோய் பரவலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலக மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி வருவது கவலை தருவதாக உலக சுகாதார அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் டாக்டர் பூணம் கேத்ரபால் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவது, மருத்துவமனைகளில் விரைவான சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்வது மூலம் தொற்றின் பாதிப்பை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

மேலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு இருப்பதால் தமிழகத்துக்கு பரவாமல் இருப்பதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பரமணியன் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் சோதனை நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share