எங்கெங்கும் வெள்ளம்: அணைகள், ஆறுகள், அருவிகளின் தற்போதைய நிலவரம் என்ன?

இந்தியா

இந்தியாவின் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அணைகளில் நீர்வரத்து அளவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அருவி, ஆறுகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அணை, ஆறு, அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு!

நிரம்பியது பவானி சாகர் அணை!

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அந்த அணையின் நீரும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் நீரும் வந்துகொண்டிருப்பதால் பவானி சாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 25,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கனமழையால் ஆழியார் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை ஏற்கனவே எட்டிவிட்டது. இன்று காலை அணைக்கு வரும் நீர்வரத்து 1 லட்சத்து 77,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 1,80,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.04 அடியாக உள்ளது.

திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தின் வழியாக வினாடிக்கு 1லட்சத்து 38 ஆயிரத்து 712 கனஅடியும், காவிரியில் 66,396 கனஅடியும் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 50,520 கனஅடி திறக்கப்படுவதால் மொத்தமாக கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சத்து 5ஆயிரத்து 108 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் முழுவதும் கீழணை வழியாக கடலுக்கு திறக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் காரணமாக காவிரி ஆற்றில் பெருமளவுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், தோட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் ஆற்றங்கரையில் உள்ள பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பகுதியில் காவேரி கரையோரம் இருந்த 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

திருச்சி மாவட்டம் வரை காவிரியிலும், அதன் பிறகு கொள்ளிடத்திலும் வெள்ளம் அபாய கட்டத்தில் செல்கிறது. எனவே காவிரி, கொள்ளிடத்தில் மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். திருச்சியில் ஆற்றின் கரையோரமாக வசிப்பவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆறு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அனைத்து இடங்களிலும் காவிரிக்கு செல்லும் பாதை தடுக்கப்பட்டு எச்சரிக்கை வாசகம் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் காவல் துறையினர், கிராம நிர்வாக அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல் நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கலில் தற்போது 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. எனினும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கரையோர வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. காவிரி கரையோர கிரமங்களான சத்திரம், ஊட்டமலை, நாடார் கொட்டாய் , ஆலம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் அந்தப் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.

வைகையில் வெள்ளம்!

வைகை அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கன மழையின் காரணமாக, வைகை அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மதுரை நகரைக் கடந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால், மதுரை நகரின் மையப் பகுதியில் உள்ள கல் பாலம் நீரில் மூழ்யிருக்கிறது. வெள்ள நீர் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்வதையும் குளிப்பதையும் கால்நடைகளைக் குளிக்க வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குற்றாலத்தில் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் கன மழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பாறையே தெரியாத அளவிற்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி போலீசார் அருவியில் குளிக்க இன்று தொடர்ந்து 6வது நாளாக தடை விதித்துள்ளனர். அதே போன்று தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை, சுருளி அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த அருவிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும்!

தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 80 ஆயிரம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய மற்றும் புதிய கொள்ளிடம் ஆற்றில் நடுவே அமைந்துள்ள திட்டுக்காத்தூர், கீழ குண்டலபாடி, அக்கரை ஜெயக்குண்டப்பட்டினம் ஆகிய கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன. இதனையடுத்து இந்த கிராமங்களைச் சேர்ந்த பலரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே செல்வம், மாவட்ட ஆட்சியருடன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி – காரமேடு இடையே 400 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆக. 6-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 7, 8, 9-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று மன்னார்வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக் கடல், வடக்கு கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய முதலமைச்சர்!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம், உணவு, மருத்துவ வசதிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அவசர கட்டுப்பாட்டு மையம் உதவி எண்கள்!

அவசர கட்டுப்பாட்டு மையம் பேரிடர் தொடர்பான தகவல்களை 24 மணி நேரமும் செயல்படும் மாநில, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களை 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும், 94458-69848 என்ற வாட்ஸ் அப் மூலமும் பொதுமக்கள் புகார் செய்யலாம் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிட்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.