பனாமா கால்வாய் கடந்த 1914 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டால் கட்டப்பட்டது.
1964 ஆம் ஆண்டு பனாமா கால்வாயை தங்களிடம் ஒப்படைத்து விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டுமென பெரும் போராட்டம் பனாமாவில் வெடித்தது. கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
பின்னர், 1977 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜிம்மி கார்ட்டர் இருந்த போது, பனாமா கால்வாயில் இருந்து அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் என்று அறிவித்தார். அதன்படி, 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பில் கிளின்டன் இருந்த போது, பனாமா நாட்டிடமே முற்றிலுடம் பனாமா கால்வாய் ஒப்படைக்கப்பட்டது. பனாமா மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக இந்த கால்வாயை விட்டு அமெரிக்கா நிரந்தரமாக வெளியேறியது.
இந்த நிலையில், அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தின் போது, அரிசோனாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசுகையில், “பனாமா அமெரிக்காவிடம் தன்னிச்சையாக அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இது முற்றிலும் நியாயமற்றது. நாங்கள் அதை உடனடியாக நிறுத்துவோம்.” என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

நேற்று அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ‘ பனாமா கால்வாயை திரும்ப பெறுவோம் . இந்த கால்வாயை சீனாதான் இப்போது நடத்துகிறது. அமெரிக்கா இந்த கால்வாயை கட்ட ஏராளமான பணத்தை செலவழித்துள்ளது. 38,000 அமெரிக்கர்கள் கட்டுமானத்தின் போது உயிரிழந்துள்ளனர். ஆனால், அப்போது கொடுத்த வாக்குறுதியை பனாமா காப்பாற்றவில்லை’ என்று குறை கூறியிருந்தார்.
டிரம்பின் பேச்சுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியுள்ள பனாமா அதிபர் ஜோஸ் ரால் முலினோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பனாமா மற்றும் பனாமா நாட்டு மக்கள் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேச்சை முற்றிலும் மறுக்கிறேன். பனாமா கால்வாய் தொடர்ந்து பனாமா நாட்டுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். பனாமா நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கும். எங்கள் நிர்வாகத்தில் தலையிட உலகில் எந்த நாட்டுக்கும் அனுமதியில்லை. யாதொருவரிடத்தில் இருந்தும் சலுகையாக இந்த கால்வாயை நாங்கள் பெறவில்லை. நாங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக பெற்றோம்.
கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் வர்த்தகம் சிறப்புற நடைபெற நாங்கள் உதவிக்கரமாக இருக்கிறோம். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் எங்கள் உரிமையை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் கால்வாயின் உரிமையையும் நாட்டின் இறையான்மையையும் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் ‘ என்று தெரிவித்துள்ளார்.
உலக கடல் வர்த்தகத்தில் 5 சதவிகிதம் பனாமா கால்வாய் வழியாக நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 80 கி.மீ தொலைவுள்ள இந்த கால்வாயில் ஹாங்காங் நகரை சேர்ந்த Hutchison Whampoa நிறுவனம் இரு துறைமுகங்களை நடத்துகிறது. பசிபிப் கடலில் பால்போவா துறைமுகத்தையும், அட்லாண்டிக் கடலில் கிறிஸ்டோபல் துறைமுகத்தையும் Hutchison Whampoa நடத்துகிறது. இதனால்தான் சீனா இந்த கால்வாயை தன் கட்டுக்குள் வைத்திருப்பதாக டிரம்ப் கருதுகிறார்.