சவுதி அரேபியாவில் வீசி வரும் கடுமையான வெப்ப அலையை தாங்க முடியாமல் 19 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பக்ரீத் பெருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவிற்கு ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய புனித யாத்திரைக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 20 லட்சம் பயணிகள் மெக்காவில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் சவூதி மெக்கா மற்றும் மதீனாவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனை தாங்க முடியாமல் இதுவரை ஜோர்டான் மற்றும் ஈரானைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியா சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளது. இதனை இருநாடுகளும் உறுதிபடுத்தியுள்ளன.
”ஹஜ் யாத்திரையின் போது 14 ஜோர்டான் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேரை காணவில்லை” என்று ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.
அதே போன்று ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பிர்ஹோசைன் கூலிவாண்ட் கூறுகையில், ”இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட ஐந்து ஈரானியர்கள் வெப்ப அலையை தாங்க முடியாமல் இறந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
சவூதியில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஜூன் மாதத்தில் கடுமையான வெப்பம் நிலவுவது வாடிக்கை.
கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது சுமார் 240 பேர் உயிரிழந்தனர். இதற்கான காரணங்கள் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை. எனினும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட வெப்பம் தொடர்பான நோய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவூதி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
மெக்காவில் கடந்த வாரம் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இதனால் யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து சவூதி தேசிய வானிலை மையத்தின் தலைவர் அய்மன் குலாம் கூறுகையில், “இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு எதிர்பார்க்கப்படும் காலநிலை மெக்கா மற்றும் மதீனாவில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி இருக்கும் என்றும், சராசரி வெப்பநிலை 1.5 முதல் 2 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை சுமார் 2,800 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே, புனித பயணம் மேற்கொண்டுள்ள பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சவூதி சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்,
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து : 5 பேர் பலி!
T20 World Cup 2024: இந்தியாவுடன் ‘Super 8’ சுற்றுக்கு முன்னேறிய 7 அணிகள் எவை?