பெங்களூரில் நேற்று இடிந்து விழுந்த புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று (அக்டோபர் 23) உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகா தலைநகர் பெங்களூரில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாளில் 186.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் பெங்களூரின் சிவாஜிநகா், அல்சூர், மாகடி ரோடு, ராஜாஜிநகா், மேக்ரி சா்க்கிள், விஜயநகர், ஹெப்பால், எலகங்கா, சாந்திநகர், பையப்பனஹள்ளி, எம்.ஜி.ரோடு பகுதிகள் முழுவதுமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் கார்களும், பைக்குகளும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீட்டிற்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூர் பாபுசாபாளையா பகுதியில், புதிதாக கட்டப்பட்ட 6 மாடி அடுக்குமாடி கட்டடம் நேற்று மாலை 4 மணியளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
அங்கு வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அவர்கள் கட்டடத்தின் உள்ளேயே குடும்பத்துடன் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று சீட்டுக்கட்டு போல் கட்டடம் திடீரென சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதைப்பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் மோப்பநாய் உதவியுடன் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று இரவு வரை இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தேங்கியுள்ள மழைநீர் மற்றும் தொடர்மழை காரணமாக கடும் சிரமத்திற்கு இடையே கடந்த 14 மணி நேரத்திற்கு மேலாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மேலும் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த கட்டிட விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த விபத்திற்கு கனமழைதான் காரணமா? அல்லது கட்டிடம் விதிமுறைகளை மீறி தரமற்று கட்டப்பட்டதா? என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிறை கைதி சித்ரவதை… டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!
முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!