தமிழ்க்கடவுள் முருககடவுளின் முக்கிய பண்டிகையான தைப்பூசம் உலகம் முழுக்க தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மலேசியாவில் சிலாங்கூரில் அமைந்துள்ள பத்துமலையில் நேற்று முதல் இன்று வரை 15 லட்சம் பக்தர்கள் முருகனை வழிபட்டுள்ளனர்.
பத்துமலை தைப்பூச விழாவில் 5 மாதங்களுக்குள் புற்று நோய் குணமடைந்ததால் முருக கடவுளுக்கு பால்குடம் எடுத்து வந்த விஜயா அனைவரையும் கவர்ந்தார்.
இது குறித்து விஜயா கூறுகையில், எனக்கு புற்றுநோய் என்று அறிந்ததும் உடைந்து போனேன். உடனே, முருகனை நோக்கி வேண்டினேன். பால் குடம் எடுத்து வருவதாக அவனிடத்தில் கூறினேன். 5 மாதங்களில் புற்று நோய் இல்லை என்று அறிவிக்கப்பட்டேன் என்கிறார்.

மலேசிய பிரதமர் இப்ராஹீம் அன்வரும் தைப்பூச திருநாளை முன்னிட்டு பத்துமலைக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தேங் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். பிப்ரவரி 11ஆம் தேதி காலை 7 மணி நிலவரப்படி 15,342 பால்குடங்கள், 285 பால் காவடிகள், 14 தொட்டில் காவடிகள், 300 அலகுக் காவடிகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டதாக சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.
இலங்கையில் நல்லூர் கந்தசாமி கோவிலில் தைப்பூசம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இங்கு, புது நெல்லை குத்தி அரிசியாக்கி சாதம் படைத்து பால், பழம், சர்க்கரை சேர்ந்து அதை முருககடவுளுக்கு படைத்து மக்களும் உண்பார்கள்.
மியான்மர், மொரிஷியஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.