தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் பயங்கர குண்டுவெடிப்பு சதியை போலீசார் முறியடித்துள்ளனர்.
ஹைதராபாத், மலக்பேட்டை சேர்ந்த அப்துல் ஜாஹத் தீவிரவாத தாக்குதல் தொடர்புடைய பல வழக்குகளில் தொடர்புடையவர்.
இந்நிலையில் அவர், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்புகளுடன் மீண்டும் தனது தொடர்பை புதுப்பித்து,
குண்டுவெடிப்பு மற்றும் கொரில்லா தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு சதி செய்வதாக தெலங்கானா மாநில போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து முசாரம்பாக், சைதாபாத், சம்பாபேட், பாபாநகர், பிசல் பண்டா, சந்தோஷ் நகர், சிறப்பு தனிப்படை போலீசார்,
கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் மற்றும் அதிரடிப்படை போலீஸார் கூட்டாக இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் அப்துல் ஜாஹத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நான்கு கையெறி குண்டுகள் மூலம் ஹைதராபாத்தில் பரபரப்பாக உள்ள இடத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மலக்பேட்டை சேர்ந்த அப்துல் ஜாஹத் 39, சைதாபாத்தை சேர்ந்த சமீயுதீன் என்கிற அப்துல்சமி 40, மெஹிதிப்பட்டினத்தை சேர்ந்த மாஸ் ஹசன் ஃபாரூக் 29 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூன்று பேரும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர் எஸ் எஸ் தலைவர்கள் மற்றும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை சேர்ந்த ஐஎஸ்ஐ அமைப்பு மூலம் பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது.
அப்துல் ஜாஹத்திடம் இருந்து இரண்டு கையெறி குண்டுகள், ரூ.3 லட்சத்து 91 ஆயிரம், 2 செல்போன், சமியுதீனிடம் இருந்து ஒரு கையெறி குண்டு, ரூ. 1.50 லட்சம், ஒரு செல்போன், ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள், மாஸ் ஹசனிடம் இருந்து ஒரு கையெறி குண்டு, இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கலை.ரா
உளவுத் துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்!
புதுச்சேரியில் கூடியது அவசர அமைச்சரவை!