இந்திய சீன எல்லை மோதல் விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இந்திய – சீன எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9ம் தேதி நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன துருப்புகள் பின்வாங்கிச் சென்றன. இருப்பினும் சீனப் போர் விமானங்கள் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்திய போர் விமானங்களும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இதனால் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
இது குறித்து நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் இன்றைய அலுவல் நேரத்தில் மத்திய அரசு விவாதம் நடத்த வேண்டும் என கூறி 267 விதியின்படி மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
மாநிலங்களவை அலுவல் நேரம் தொடங்கியதும் விவாதம் நடத்தக்கோரி மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் அவையின் தலைவர் ஜகதீப் தங்கர் அனுமதி மறுத்த நிலையில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, மல்லிகார்ஜுன் கார்கே, சீன ராணுவம் இந்திய நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது.
இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கும் முக்கியமான விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றால், வேறு எந்த விஷயம் குறித்து பேச வேண்டும் என கடுமையாக கேள்வி எழுப்பினார்.
மேலும் மாநிலங்களவையில் இந்திய சீன எல்லை சண்டை தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும்,
ஆனால் மத்திய அரசு அதற்கு தயாராக இல்லை என்பதாலே ஜனநாயக அடிப்படையில் வழங்கப்படும் ஒத்திவைப்பு நோட்டீஸ் மீது அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.
இருப்பினும் தொடர்ந்து விவாதம் நடத்த அவை தலைவர் ஜகதீப் தங்கர் அனுமதி மறுத்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.
கலை.ரா
முன்னாள் மாணவர்களிடம் நிதி கேட்கும் முதல்வர்: நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம்!
எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ!