அமெரிக்காவில் பனிப்புயல்: விமானங்கள் ரத்து!

Published On:

| By Jegadeesh

அமெரிக்காவில் பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் அந்நாடு முடங்கி உள்ளது. மொத்தம் 18 லட்சம் வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இருளில் மூழ்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வழக்கத்துக்கு மாறாக பனிப்புயல் தொடர்ந்து வீசி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் ஓஹியோ, சிகாகோ, டெக்சாஸ், நியூயார்க் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அதிகப்படியான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சில இடங்களில் பனிபுயல்கள் வீசி உள்ளன. மேலும் தொடர்ந்து உறைபனி நிலவுகிறது. இயல்பாக டிசம்பர் மாதத்தில் குளிர் கடுமையாக இருக்கும் நிலையில் பனிப்புயல், உறைபனி ஆகியவை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது. இந்நிலையில் தான் Bomb பனிப்புயல் தொடர்ந்து அமெரிக்காவை தாக்கியுள்ளது.

மேலும் அமெரிக்காவில் உள்ள மைனி பகுதியில் இருந்து சியாட் வரை ஏராளமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். Poweroutage.us இணையதளத்தின் தகவலின்படி நேற்று காலை வரை அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

இந்த மின்தடையால் கிறிஸ்துமஸ் தினத்திலும் இரவில் வாழ வேண்டிய நிலைக்கு பல லட்சம் மக்கள் தள்ளப்பட்டனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை 2 ஆண்டுக்கு பிறகு வெகுவிமரிசையாக கொண்டாட இருந்ததாகவும் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த புயலால் கார் விபத்து , மரம் விழுந்து ஏற்பட்ட பலி என மொத்தம் 18 பேர் இறந்துள்ளனர். பல இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தொடர்ந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து நடந்துள்ளது.

நேற்றைய தினம் மட்டும் 2,700 க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 6,400 க்கும் அதிமான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் ‘வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், உயிருடன் இருங்கள்.” என்று மக்களை எச்சரித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

படப்பிடிப்பு தளத்தில் அதிர்ச்சி: தற்கொலை செய்த நடிகை

நாட்டு மக்களுக்கு வாழ்த்து-பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel