இந்தியாவில் 76 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் நெட் பயன்படுத்தும் போன்களா? என்றால் இல்லை.
பல கோடி மக்கள் இப்போது சாதாரண அழைப்புக்காகவும் , அரசு நலத்திட்டங்களுக்கான ஓடிபி யைப் பெறுவதற்காகவும், நெட் வசதி இல்லாத போன்களை பயன்படுத்துகின்றனர்.
அவர்களுக்கு ஒரு செல்போன் எண் மட்டுமே தேவையாக இருக்கிறது. ஆனால். அந்த மக்கள் தாங்கள் பயன்படுத்தாத இணைய வசதிக்கும் சேர்த்து, வலுக்கட்டாயமாக கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தனர்.
இதனால், டிராய் தற்போது வேறு திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் என்று மூன்றுக்கும் தனித்தனியாக ரீசார்ஜ் திட்டத்தை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும். பி.எஸ்.என்.எல்,ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்களில் நமது சிம்கார்டை உயிர்ப்புடன் வைக்க வேண்டுமென்றால் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த நிறுவனங்கள் இனிமேல் டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொடுக்கக்கூடிய ஸ்பெஷல் கட்டணங்களை( special tariff vouchers)ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 90 நாட்கள் வேலிடிட்டியில் மட்டுமே கிடைத்துவந்த சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களின் கால வரம்பை 365 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டுமே தனியாக கிடைக்கும் திட்டங்கள் வருடம் முழுவதும் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த உத்தரவை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் எப்படி அமல்படுத்துகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இந்த உத்தரவை திரும்ப பெற வைத்து விடக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஒத்தையா நின்று தோற்பதை விட, கை கோர்த்து வாழலாம்!- நிஸ்ஸான், ஹோண்டா இணைய 5 காரணங்கள்!