தெலுங்கானா மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்திற்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டி அவரை அம்மாநிலம் கவுரப்படுத்தியுள்ளது.
132 ஆண்டுகள் நவாப்களின் அரண்மனையாக இருந்த தெலுங்கானாவின் தற்போதைய தலைமைச் செயலகம் ஆந்திராவின் தலைமை செயலகமாகச் செயல்பட்டு வந்தது. இந்த தலைமைச் செயலகத்தில் 16 ஆந்திர முதலமைச்சர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
பல போராட்டங்களுக்குப் பின் தெலுங்கானா ஆந்திராவிலிருந்து தனி மாநிலமாகப் பிரிந்து செயல்பட்டது. தனி மாநிலமாக உருவான பிறகு சந்திரசேகரராவ் இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறார்.
இப்போது 25 ஏக்கர் நிலப்பரப்பில், 10 லட்சம் சதுர அடியில் 10 பிளாக்குகளாக தலைமைச் செயலகம் செயல்பட்டு வந்தது இந்த கட்டிடங்கள் மிகவும் பழமையானதால் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இதனால் சந்திரசேகர் ராவ் பாதுகாப்பு இல்லை எனக் கூறி ரூ. 500 கோடி செலவில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டுவதற்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பணி துவங்கப்பட்டது. விரைவில் அப்பணி முடிவடைய இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 15 தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தெலங்கானா தலைமைச் செயலக வளாகத்திற்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தெலுங்கானா மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும். இந்த முடிவு இந்தியாவுக்கு உகந்தது. இந்திய மக்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் சமமான மரியாதை பெற வேண்டும் என்ற அம்பேத்கரின் தத்துவத்துடன் தெலங்கானா அரசு முன்னேறி வருகிறது ”என்று தெரிவிக்கப்பட்டிருகிறது.
மேலும் அந்த அறிக்கையில், “டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையுடன் தெலுங்கானா தனி மாநிலமாக மாறியுள்ளது. தெலங்கானா மாநில அரசு, அம்பேத்கரின் அரசியலமைப்பு உணர்வை செயல்படுத்துவதன் மூலம் எஸ்சி, எஸ்டி, பிசி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் சமூகங்கள் மற்றும் ஏழை உயர்சாதி மக்களுக்கு மனிதாபிமான ஆட்சியை வழங்கி வருகிறது.
இந்தியா பற்றிய அம்பேத்கரின் கனவு பன்முகத்தன்மை கொண்ட தனித்துவமான ஜனநாயகத் தன்மையைக் கொண்டுள்ளது. கூட்டாட்சி உணர்வை செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்க முடியும் என்று அம்பேத்கர் நமக்கு வழிகாட்டுகிறார்.
சாதி, சமயம், பாலினம், பகுதி என்ற பாகுபாடு இல்லாமல் இந்திய மக்கள் சமமாக மதிக்கப்படுவதும், அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுவதும்தான் உண்மையான இந்தியத்தன்மை. அப்போதுதான் உண்மையான இந்தியா உருவாகும். அதற்கான எங்கள் முயற்சிகள் தொடரும்” என்று முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

”அனைத்து துறைகளிலும் தொலைநோக்கு பார்வையுடன் முன்னேறி, கடந்த காலங்களில் நாட்டிற்கு முன்னோடியாக இருந்த தெலுங்கானா மாநிலம், மீண்டும் மாநில தலைமைச் செயலகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டுவதன் மூலம் நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
நாட்டின் கெளரவத்தை உயர்த்தும் வகையில், நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை விட பெரிய பெயர் வேறு எதுவும் இருக்க முடியாது. டெல்லியில் புதிதாக கட்டப்படும் சென்ட்ரல் விஸ்டா வளாகத்திற்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை சூட்டக் கோரி, பிரதமர் மோடிக்கு கேசிஆர் கடிதம் எழுதுவார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வரின் அறிக்கையைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 15) இரவு தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் புதிய தலைமைச் செயலக கட்டடத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை முறைப்படி வெளியிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குச் சட்ட மேதை அம்பேத்கர் பெயரைச் சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டுவதை விடச் சிறந்தது வேறு எதுவுமில்லை’ என்று சந்திரசேகர ராவ் கூறினார்.
புதிய தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதன் மூலமாக தலித் ஓட்டு வங்கியை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் பாஜகவுக்கு பெரிய செக் வைத்துவிட்டார் கே.சி.ஆர். என்கிறார்கள் அம்மாநில அரசியல் நோக்கர்கள். மேலும் டெல்லியில் கட்டப்படும் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டி வலியுறுத்துவதன் மூலம் பாஜகவுக்கும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார் கே.சி.ஆர். என்கிறார்கள்.
கேசிஆரின் முடிவை பல கட்சிகள் வரவேற்றிருக்கும் நிலையில் தெலங்கானா மாநில பாஜகவோ, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு தலித்தை முதல்வர் ஆக்குவோம் என்று கேசிஆர் சொன்ன வாக்குறுதி என்னாச்சு?’ என்று ஒரு கேள்வி எழுப்பியுள்ளது.
மோனிஷா
கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்: அரசு தரப்பில் விளக்கம்!