அதிகரிக்கும் கொரோனா: கலக்கத்தில் தெலங்கானா
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தெலங்கானா மாநிலத்தில் முக கவசம் அணிவதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில்”வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்ல வேண்டாம்.
அலுவலகங்களில் கை கழுவுவதற்காக கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
காய்ச்சல், வறட்டு இருமல், உடம்பு வலி, தலை வலி அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுங்கள்.
தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியது. அதில் கொரோனா பரிசோதனைளை அதிகரிக்க வேண்டும், மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்தசூழலில், தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: 3 நாட்களுக்கு பின்னர் மீட்பு!
அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!