குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த டீன் ஏஜ் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகமே தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. யூகேஜி படிக்கும் குழந்தை முதல் கோலூன்றி நடக்கும் முதியவர்கள் வரைக்கும் இன்று செல்போன்களின் தேவை அதிகரித்து விட்டது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள லுன்சேலா கிராமத்தில் நேற்று (பிப்ரவரி 20) எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கிராமத்தில்,தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு குறைவான டீன் ஏஜ் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளனர்.
செல்போன் மூலம் காதல், சாதி மறுப்பு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டை முன்வைக்கும் தாக்கூர் சமூகத்தினர், சமூக மரபுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
அத்துடன், திருமணம் குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். அதன்படி, “நிச்சயதார்த்தம் அல்லது திருமண விழாவில் 11 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
தாக்கூர் சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பிரம்மாண்டமாக திருமணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருமணம் மற்றும் நிச்சயதார்த்தத்திற்கான செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
திருமணத்தில் டிஜே பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு திருமணத்தை நிறுத்தும் குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அபராதமாக வசூலிக்கப்படும் பணத்தை கல்வி மற்றும் சமூக வசதிகளை உருவாக்க பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் உயர்கல்விக்காக வெளி ஊருக்குச் சென்றால், கிராமத்தைச் சேர்ந்த சமுதாயத்தினர் அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.” இவ்வாறு பல தீர்மானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த தீர்மானங்கள் அனைத்தும் வாவ் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜெனிபென் தாக்கூர் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்டாலின் 70: துரைமுருகன் புதிய அறிவிப்பு!
மக்கள் நீதி மய்யம் 6-ஆம் ஆண்டு துவக்க விழா!