கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் டீ கடை நடத்தி வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி மக்களை வீட்டிற்குள் முடங்க செய்தது.
பல லட்சக்கணக்கான உயிர்களை பறித்து பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிதி நெருக்கடியால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கின. சிறு குறு நிறுவனங்கள் எல்லாம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன.
இது தொடர்பாக கடந்த 2022 அக்டோபரில் உலக வங்கி ”வறுமை மற்றும் பகிரப்பட்ட செழிப்பு 2022” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், கொரோனா காலத்தில் உலகளவில் 7 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் சென்றுள்ளனர். அதில் 79 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும் போது இந்திய பொருளாதாரம் உலகளவில் 10வது இடத்தில் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் உலகளவில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜெய்சிங்நகர் பகுதியைச் சேர்ந்த கலு ராய் (55) பொருளாதார நெருக்கடி காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கலு ராய் ஜெய்சிங்நகர் பகுதியில் டீக்கடை ஒன்று நடத்தி வந்தார். ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் காரணமாக அவர் கடையை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது.
கொரொனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கலு ராய் மீண்டும் கடையைத் திறந்தார். இதன் மூலம் தனது நிதி நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நில ஆக்கிரமிப்பு காரணமாக அவரது டீக்கடை இடிக்கப்பட்டது.
இதனால் தள்ளுவண்டி மூலமாக டீ விற்க முடிவு செய்தார். ஆனால் கலு ராயின் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
கடன் பிரச்சனை அதிகமாகி கொண்டிருந்ததால் மனமுடைந்த கலு ராய் அவர் நடத்தி வந்த டீக்கடைக்கு அருகே உள்ள மரத்தில் நேற்று (ஜனவரி 21) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..
அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கலு ராயின் கால்சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் ”கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யாரும் என் பிரச்சனையைக் கவனிக்கவில்லை. இதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது. அது தற்கொலை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கலு ராய்க்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். அவரது மகன் டீக்கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.
கலு ராயின் மரணம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
தமிழ்நாட்டில் பணியாற்றுவது எனக்கு ஒரு பாடம்: ஆளுநர் ஆர்.என். ரவி
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டம்: அழகிரி ஆப்சென்ட் ஏன்?