சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆன்லைனில் புக்கிங் செய்வதற்கு மட்டும் ஆதார் கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது ஸ்பாட் புக்கிங்கிற்கு ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், கேரள போலீசாரும் தேவசம் போர்டும் திணறி வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் , இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்ததால், டிக்கெட் முன்பதிவு செய்யாத பக்தர்களும் கூட சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில், 10 ஆயிரம் பேர் நேரடியாக சென்று புக்கிங் செய்பவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறுகையில், சபரிமலையில் ஆன்லைன் தரிசனத்துக்கு புக்கிங் செய்யும் பக்தர்கள் அப்படியே கேரள போக்குவரத்துக் கழக பஸ்சையும் புக்கிங் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது, குழுவில் 40க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 10 கி.மீ தொலைவுக்குள் கேரள அரசு பஸ் சென்று பக்தர்களை பிக் அப் செய்து கொள்ளும். இதற்கு, 10 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
தற்போது, சபரிமலை பிரசாதமான அரவணா 6 லட்சம் டின்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. சீசன் நெருங்க நெருங்க 45 லட்சம் டின்களாக உயர்த்தப்படும். அதோடு, சபரிமலையில் விபத்து ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் 5 லட்சம் இன்சூரன்சுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் ஆதார் கார்டு நகலை கொண்டுவரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“எவ்வளவு நாட்கள் சிறையில் வைக்கப்போகிறீர்கள்?” போதை ஜோடிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!
தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55′ ! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு