டிசிஎஸ் நிறுவனத்தில் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் வாங்கி ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் சேர்த்துள்ள செய்தியால் நாட்டின் ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றாக டாட்டா கன்சல்டன்ஷி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.
இது மஹாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டுள்ள டாடா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.
உலகளவில் 46 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணம் வாங்கி கொண்டு பணியில் சேர்ந்துள்ள செய்தி ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள சிலர் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் வாங்கி கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 50,000 பேரை பணியில் அமர்த்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் குரூப்(RMG) தலைவர் ஈ.எஸ்.சக்ரவர்த்தி பல வருடங்களாக ஸ்டாஃப்பிங் நிறுவனங்களிடம் இருந்து அதிகப்படியான கமிஷன் பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து மனிதவளப் பிரிவின் முக்கிய நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான அருண் ஜிகே உட்பட 4 அதிகாரிகளை டிசிஎஸ் நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் 3 ஸ்டாஃப்பிங் நிறுவனங்களை டிசிஎஸ் பிளாக்லிஸ்ட் செய்துள்ளது.
இந்த மோசடியானது whistleblower எனப்படும் பெயர் தெரியாத ஒருவரால் நேரடியாக டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புகாரைத் தொடர்ந்து டிசிஎஸ் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியான அஜித் மேனன் தலைமையில் 3 முக்கிய அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் RMG பிரிவில் மட்டும் சுமார் 3,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே புனேவைச் சேர்ந்த ஐடி ஊழியர்களின் தொழிற்சங்கம், ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி,
கார்ப்பரேட் விவகார அமைச்சகம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
எதிர்க்கட்சிகள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் கூறிய 7 ஆலோசனைகள்!