பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 40 பெரிய விமானங்கள் மற்றும் 210 சிறிய விமானங்களை ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் வாங்க டாடா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய விமான போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனால் மத்திய அரசு பெரும் நிதி சுமைக்கு உள்ளானது.
இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது. ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய நிறுவனங்களுடன் ஏர் இந்தியாவும் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
ஏர் இந்தியாவின் கீழ் இயக்கப்படும் விமான எண்ணிக்கையும் 27 சதவீதம் அதிகரித்து அதன் சராசரி வருமானமும் 2 மடங்காக உயர்ந்துவிட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனம் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ. 8 லட்சம் கோடி மதிப்பில் புதிதாக 500 விமானங்களை வாங்க முடிவு செய்தது.
அதன் முதல் பகுதியாக டாடா குழுமம் பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி நீண்ட தூரம் பறக்கக்கூடிய A350 எனப்படும் 40 பெரிய விமானங்கள் மற்றும் 210 சிறு விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
A350 வகை விமானங்கள் 17,000 கிமீ வரை பறக்கும் சக்தி கொண்டது. வழக்கமான மூன்று-வகுப்புகளின் படி 300 முதல் 410 பயணிகளையும், ஒரே வகுப்பு என்றால் 480 பயணிகளையும் ஏற்றிச் செல்லும் வசதி உடையது.
A320 மற்றும் A220 எனப்படும் சிறிய வகை விமானத்தில் 140 முதல் 180 பயணிகள் வரை பறக்க முடியும். இந்தியாவில் உள்ள பல விமான நிறுவனங்கள் A320 வகை விமானத்தையே இயக்கி வருகின்றன.
ஏர்பஸ் உடனான ஒப்பந்தம், 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ரத்தன் டாடா மற்றும் இரு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த ஒப்பந்தம் முடிவானது.
இதுகுறித்து ஏர்பஸ் தலைமை நிர்வாகி குய்லூம் ஃபௌரி கூறுகையில், “ஏர் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு ஏர்பஸ் உதவுவது ஒரு வரலாற்று தருணம்” என்று தெரிவித்தார்.
“இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான நட்புறவில் ஒரு மைல்கல்” என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
”அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2,500 விமானங்கள் தேவைப்படும். இதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருமாறும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏர் இந்தியாவின் வர்த்தகம் வரும் காலங்களில் உச்சக்கட்டத்தை அடைவதுடன் ஒரே விமானத்தில் 400க்கும் மேற்பட்டோர் பறக்கும் வசதியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கோவை கொலை : 2 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
குரூப் 4 முடிவு எப்போது?: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!