உலகில் உள்ள பல்வேறு துறைகளில் இந்தியர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மற்ற நாடுகளின் அரசியலிலும் இந்தியர்களின் ஆளுமை அதிகரித்து வருகிறது. அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியில் உள்ளார். அதே போல இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் மற்றும் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் ஆகியோர் பதவி வகித்து வரும் நிலையில், தற்போது தமிழர்களுக்கு நெருங்கிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தேர்தலுக்கு தமிழரான தர்மன் சண்முகரத்னம் போட்டியிடவுள்ளார்.
சிங்கப்பூரின் அதிபர் ஆட்சிக்காலம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி தமிழர், தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியை சேர்ந்த இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியோன் ஆகிய 3 பேரும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூர் அதிபராக ஹலிமா யாக்கோபின் பதவி வகித்து வருகிறார். இதில் தர்மன் சண்முகரத்தினம் ஆளும் கட்சியான பிஏபி கட்சியை சேர்ந்தவர். செப்டம்பர் 1ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சிங்கப்பூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் தமிழில் பேசியே ஓட்டுசேகரிக்கும் பணியில் உள்ளனர்.
சீன வம்சாவளி வேட்பாளர்களும் தமிழர்கள் மத்தியில் தமிழில் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். மேலும் தர்மன் சண்முகரத்தினம் ’Lau Pa Sat’ பகுதியில் பிரச்சாரம் செய்தபோது தனது சின்னமான அன்னாசிப்பழத்தை அங்குள்ள ஜூஸ் கடைக்காரருக்கு வழங்கி வாக்குசேகரித்துள்ளார்.
யார் இந்த தர்மன்சண்முகரத்தினம் ?
25 பிப்ரவரி 1957ல் பிறந்த சண்முகரத்தினம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் சிங்கப்பூர் அரசியல்வாதியும் பொருளியலாளரும் ஆவார். பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றியவர்.
தர்மன் தற்போது முப்பது நாடுகள் அடங்கிய பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய பேரவையின் தலைவராக உள்ளார். ஐ.நா. தண்ணீரின் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் பன்முகத்தன்மைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
இவர் 2019 முதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சராகவும், 2015 முதல் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், 2011 முதல் சிங்கப்பூரின் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் முன்னதாக 2011 முதல் 2019 வரை துணைப் பிரதமராகவும், 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராகவும், 2007 முதல் 2015 வரை நிதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.
ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராக உள்ள இவர், 2001 முதல் தமா சுரோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவ்தற்காக கடந்த 3 ஆண்டுகளாக வகித்து வந்த அமைச்சர் பதவி மற்றும் பொதுவாழ்வு பதவிகளை துறந்துள்ளார். மேலும் தனது வாக்கு சேகரிப்பின்போது கவுரவத்திற்காக அதிபராக ஆசைப்படவில்லை என்றும் நீண்டகால நோக்கத்தின் அடிப்படையில் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புவதாகவும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் தர்மன்.
சண்முகப்பிரியா
ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்த அமைச்சர் மா.சு
யோகி ஆதித்யநாத் சந்நியாசியா? ரஜினிக்கு ’முரசொலி’ சரமாரி கேள்வி!