வயநாட்டில் ஏராளமான தமிழ் மக்களும் வசிக்கின்றனர். எனவே, வயநாட்டில் சென்னையை சேர்ந்த சீக்கிய தமிழ்ப் பெண் ஒருவரும் போட்டியிடுகிறார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் அருணாசலம் பெருமாள் அம்மாள் தம்பதியினருக்கு சீதா பிறந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சீதா இளம் வயதில் இருந்தே சாதியக் கொடுமைகளை சந்தித்து வந்தார். வளர்ந்த பிறகு, சென்னைக்கு குடி பெயர்ந்தார். இவரது, கணவர் ராஜன்சிங்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்தான். இருவரும் பெரியார் மீது கொண்ட பற்றினால் சாதிகளற்ற வாழ்க்கையை வாழ வேண்டுமென்பதுதான் இருவருக்கும் ஆசை.
இதற்கிடையே, பகுஜன் திராவிட பார்ட்டி என்ற கட்சியை உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஜீவன்சிங் நடத்தி வந்தார். தூத்துக்குடியை சேர்ந்த இவர், பஞ்சாப்பில் கன்சிராம் பிறந்த ஆனந்தப்பூர் ஷாகிப் என்ற குருத்வாராவுக்கு சென்றார். அங்கு, தான் சீக்கிய மதத்தை தழுவ முடிவு செய்திருப்பதாக கூறினார். அங்கிருந்தவர்கள் தாடி வளர்த்து விட்டு 6 மாதம் கழித்து வரும்படி கூறியுள்ளனர். அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீவன் சிங் சீக்கிய மதத்தை தழுவி கொண்டார். தற்போது, தாடி வளர்த்து டர்பன் கட்டி சீக்கியர்கள் போலவே வாழ்கிறார்.
தற்போது, தூத்துக்குடியிலுள்ள கோரம்பள்ளத்தில் சின்ன குருத்வாரா ஏற்படுத்தியுள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் 25 தமிழ் சீக்கியர்கள் அங்கு பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கமானது. ஜீவன் சிங்கின் அறிமுகம் சீதா கவுர் , ராஜன் சிங் தம்பதிக்கு கிடைத்தது. தொடர்ந்து, இவர்களும் சீக்கிய மதத்துக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மாறியுள்ளனர்.
இப்போது, சீதா என்பவர் சீதா கவுர் ஆக மாறி விட்டார். பகுஜன் திராவிட கட்சியில் சேர்ந்து முழு நேரமும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது, வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து தமிழ் சீக்கிய பெண்ணான சீதா கவுரும் போட்டியிடுகிறார். பஞ்சாப் பெண் போலவே டர்பன் கட்டி பொது நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்கிறார். இவர், தேர்தலில் போட்டியிடுவது புதிய விஷயம் அல்ல. ஏற்கனவே, தென்காசி தொகுதியில் சீதா கவுர் போட்டியிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி பற்றி கேட்டால், அவரை பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது , ஆனால் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவே அவரை எதிர்த்து போட்டியிடுவதாக சீதா கவுர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படம் : ட்ரெய்லர் நாளை வெளியீடு!