ஆப்கானிஸ்தானில் பெண்கள் என்.ஜி.ஓ நிறுவனங்களில் பணிபுரியத் தடை விதித்ததற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை கைபற்றிய தாலிபான்கள் அன்று முதலே பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தாலிபான்களின் இந்த நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இஸ்லாமிய நாடுகள் உள்படப் பல நாடுகள், இது இஸ்லாம் கோட்பாட்டுக்கு எதிரானது எனக் கண்டனம் தெரிவித்தன. மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என ஜி – 7 நாடுகள் விமர்சித்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தாலிபான் அரசு நேற்று (டிசம்பர் 24) அறிவித்துள்ளது.
இந்த செய்தியினை தாலிபான் பொருளாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் ஹபீப், “என்.ஜி.ஓ நிறுவனங்களில் பெண்களை பணியில் சேர்க்கக்கூடாது. எந்த ஒரு என்ஜிஓ நிறுவனமாக இருந்தாலும், இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை என்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாகத் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சரியாக ஹிஜாப் அணிவதில்லை என்று புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாலிபான்களின் இந்த உத்தரவிற்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், “தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்காக்கும் உதவிகளை இந்த முடிவு சீர்குலைக்கும்.
தாலிபான்கள் உத்தரவிற்கு இணங்காத நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்கக் கூடாது என்று தாலிபான்கள் உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவிற்கு மாணவிகள், பெண்கள் உட்பட ஆப்கான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சேர்த்துச் செயல்படுகிறோம்: உதயநிதி ஸ்டாலின்
பேட்டிங்கில் கலக்கிய அஸ்வின்… டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா