நள்ளிரவில், முதல்வரின் பெண் செயலாளர் படுக்கை அறைவரை சென்ற அதிகாரி!
ஹைதராபாத்தில் நள்ளிரவில் முதல்வர் அலுவலக செயலாளரான ஸ்மிதாவின் படுக்கை அறை வரை சென்ற துணை தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கேட்டம் கம்யூனிட்டியில் மூத்த ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
இதில் வீட்டு எண் 11 ல் மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் முதல்வர் சந்திரசேகர ராவின் அலுவலக செயலராக உள்ள ஸ்மிதா சபர்வால் வசித்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவு செய்வதில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் ஸ்மிதா சபர்வால்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு துணை தாசில்தார் ஆனந்குமார் அவரது நண்பருடன் நள்ளிரவு 12 மணி அளவில் கேட்டம் கம்யூனிட்டிக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த பாதுகாவலரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பெயர் மற்றும் வில்லா எண் கூறி அவரது நண்பர் என தெரிவித்ததால் உள்ளே அனுமதித்தனர்.
உள்ளே சென்ற ஆனந்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சமீதா சபர்வால் தங்கியிருந்த வில்லாவில் உள்ள ஸ்லைடிங் டோரை திறந்து உள்ள சென்று படுக்கை அறை கதவை தட்டியுள்ளார்.
கதவை திறந்து பார்த்த அதிகாரி ஸ்மிதா படுக்கை அறை வரை வந்தவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் யார் நீங்கள் என கேட்டதற்கு, “நான் துணை தாசில்தார் எனக்கு வேலையில் சில பிரச்சனைகள் உள்ளது. அதுகுறித்து பேச வந்தேன், உங்கள் ட்விட்டிற்கு அவ்வப்போது ரீடிவிட் செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.
இதனையடுத்து ஸ்மிதா சபர்வால் சத்தம் போடவே வெளியே இருந்த பாதுகாப்பு போலீசார் வந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் தப்பி ஓட முயன்ற நிலையில் இருவரையும் கைது செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் மூத்த பெண் ஐ.ஏ.எஸ். வீட்டிற்கு இரவில் சென்றது ஏன்?
அவர் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபடும் நோக்கத்துடன் சென்றாரா அல்லது உண்மையாகவே வேலையைப் பற்றி பேசச் சென்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்மிதா சபர்வால் தனது ட்விட்டரில், ”மிகவும் வேதனையான அனுபவம். இரவில் ஒரு நபர் என் வீட்டிற்குள் நுழைந்தார். திடமான மனநிலையால் சமாளித்து என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன்.
இந்த சம்பவத்தில் இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால்… எவ்வளவு பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தாலும், எப்போதும் ஒருமுறை கதவுகளைச் சரிபார்க்க வேண்டும். நாமே பூட்டிட வேண்டும். அவசரகாலத்தில் #100க்கு டயல் செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
துணை தாசில்தார் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், ஐஏஎஸ் ஸ்மிதா சபர்வாலின் கருத்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காண்பிக்கிறது.
முதல்வர் அலுவலக செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
கலை.ரா
உலகின் அனைத்து பிரச்சனைகளும் எப்போது தீரும்? – நீதிபதியின் தீர்ப்பால் சலசலப்பு
மதுரை எய்ம்ஸ்: கல்லூரியை பார்க்காமலே பட்டம் பெறும் மாணவர்கள்! – சு. வெங்கடேசன்