கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகருக்குள் போராளி குழுக்கள் நுழைந்ததால் அந்த நாட்டு அதிபர் ஆசாத் தப்பி ஓடி விட்டார். அவர், ரஷ்யாவில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிரியாவில் ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் எனப்படும் ஹெச்.டி.எஸ் என்ற போராளி குழுதான் முக்கிய காரணம். அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி, ‘அல் ஜோலானியை சிரியாவுக்கு அனுப்பியுள்ளோம். அவர்தான் எங்களது சிறந்த போராளி. சிரியாவிலுள்ள எங்கள் மகன்களுடன் சேர்ந்து அவர் போரிடுவார். எங்கள் அமைப்புக்கு கிடைக்கும் பணம், ஆயுதங்களில் பாதியை அவர்களுக்கும் அனுப்பி வருகிறோம். லோக்கல் ஜிகாத்திகளுடன் சேர்ந்து முகாஜிதின்கள் போரிடுவார்கள்’ என்று பாக்தாதி தெரிவித்திருந்தார். அதாவது ,உள்நாட்டில் இருந்து போரிடுபவர்களை ஜிகாதிகள் என்றும் வெளிநாட்டில் இருந்து போரிட செல்பவர்களை முகாஜிதின்கள் என்றும் போராட்ட குழுக்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாக்தாதி அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். எனினும், பாக்தாதி அனுப்பிய அல் ஜோலோனி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பு சிரியாவை கைப்பற்றி விட்டது. கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இந்த அமைப்பு சிரியா ராணுவத்துக்கு எதிராக போரை தொடங்கியது. பத்தே நாட்களுக்குள் சிரியாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. எப்படி இந்த ஆச்சரியம் நடந்தது?

பாக்தாதியின் லெப்டினன்ட்டாக இருந்த அல் ஜோலோனி, சிரியாவில் இட்லிப் நகரை சுற்றி தனது அமைப்பை நடத்தி வந்தார். முதலில், இந்த அமைப்பு இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டது. தொடர்ந்து, ஒற்றை எதிரியாக இருந்த சிரிய ராணுவத்தை எதிர்த்து அதிரடியாக போரிட்டது. முதலில் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான Aleppo வீழ்ந்தது. இந்த நகரம் வீழ்ந்ததும் அல் ஜோலோனி, ஆசாத்தை அதிபர் பதவியில் இருந்து அகற்றுவதுதான் முதல் இலக்கு என்று கொக்கரித்தார்.
பின்னர், தெற்கு நோக்கி நகர்ந்த போராளிகள் டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டனர். அதிபர் ஆசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு ஓட்டம் பிடித்து விட்டார்.
அசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததாக வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான ரஷ்யாவின் தூதர் மிகைல் உலியானோவ் நேற்று டிசம்பர் 8ஆம் தேதி தனது டெலிகிராம் சேனலில் தெரிவித்தார்.
இதன்மூலம் 13 ஆண்டுகால உள்நாட்டுப் போர் மற்றும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இரும்புக்கரம் கொண்ட அதிபர் ஆசாத்தின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

உலக நாடுகளின் பார்வை!
இந்த நிலையில் உலக நாடுகள் சிரியாவின் தற்போதை நிலை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன.
சிரியா ஆபத்து மற்றும் நிச்சயமற்ற காலகட்டத்தில் உள்ளது என்றும், ரஷ்யா, ஈரான் அல்லது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆகியவை அங்கு செல்வாக்கு செலுத்தாதது இதுவே முதல் முறை என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
அசாத்தின் வீழ்ச்சி என்பது ஈரானின் லெபனான் கூட்டாளிகளான ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் நேரடி விளைவு. அவர்கள் பல ஆண்டுகளாக அசாத்திற்கு முட்டுக் கொடுத்தனர். அசாத் – ஜோலானி மோதலில் இருந்து விலகி இருக்க விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) தலைவர் அபு முகமது அல்-ஜோலானி கடந்த காலத்தில் கூறப்பட்ட விஷயங்களில் இருந்து தன்னைத் தூரமாக விலக்கிக் கொண்டார். ஹெச்.டி.எஸ் பெயரை ஒரு பயங்கரவாதக் குழுவாக மதிப்பாய்வு செய்வது “பரிசீலனை செய்ய வேண்டும்” என்று இங்கிலாந்து அமைச்சர் பாட் மெக்ஃபேடன் கூறியுள்ளார்.
ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி, சிரியாவின் முன்னேற்றங்கள் குறித்து டோக்கியோ உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

சரி யார் இந்த அல் ஜோலானி?
சவுதி அரேபியாவில் கடந்த 1982 ஆம் ஆண்டு அல் ஜோலானி பிறந்தார். தந்தை ஆயில் நிறுவனத்தின் இன்ஜீனியராக வேலை பார்த்தார். இவரது ஒரிஜினல் பெயர் அகமது ஹூசைன் அல் ஷாரா என்பதாகும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஈராக்குக்கு இவர் குடி பெயர்ந்தார். ஈராக் அரசு இவரை பிடித்து புக்கா என்ற இடத்திலுள்ள சிறையில் அடைத்தது. இதே சிறையில் பாக்தாதியும் ஒரு காலத்தில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, பாக்தாதி தலைவராக இருந்த அல்குவைதா அமைப்பில் அல் ஜோலானி இணைந்து கொண்டார். ஈராக்கின் மொசூல் நகரை மையமாக கொண்டு அல்குவைதாவில் இவர் செயல்பட்டார். பின்னர், பாக்தாதி இவரை சிரியாவுக்கு அனுப்ப, ஜோலானி ஒரு ஈவு இரக்கமல்லாத ’அல் நஸ்ரா’ என்ற ஜிஹாதி அமைப்பை உருவாக்கினார். சிரியாவில் அல்குவைதா அமைப்பின் கிளையாக இது பார்க்கப்பட்டது. மனித வெடிகுண்டுகள்தான் இந்த அமைப்பின் முக்கிய ஆயுதமாகும். “அல்லாவின் சக்தி மற்றும் ஆயுதங்களின் சக்தியால் மட்டுமே ஒரு ஆட்சியை நிலைநிறுத்த முடியும் என்று வீடியோ வெளியிட்டு ஜோலானி தனது செயல்களை நியாயப்படுத்தியதும் உண்டு.
ஒரு கட்டத்தில் பாக்தாதியிடம் உறவை முறித்து கொண்ட ஜோலானி, அல் நஸ்ராவை தனியாக சுதந்திரமாக செயல்படும் என்று அறிவித்தார். இஸ்லாமின் ஷரியத் சட்டப்படி இயங்கும் அரசாக சிரியாவை மாற்ற வேண்டுமென்பதே அவரின் லட்சியமாக இருந்தது. ஷரியத் சட்டத்தின் கீழ் இயங்கும் பல அரசுகளை உருவாக்க வேண்டுமென்பது அவரின் நீண்ட கால லட்சியம். இஸ்ரேலும், அமெரிக்காவும் இஸ்லாத்தின் எதிரிகள். எனவே, தங்களுக்கும் எதிரிகள் ஜோலானி கூறிக் கொள்வார்.

அதே போல, சிரியாவில் வசித்த சன்னி பிரிவு இல்லாத முஸ்லிம் மக்களையும் கடுமையாக இந்த அமைப்பினர் தாக்கினர். குறிப்பாக அதிபர் ஆசாத்தின் Alawites பிரிவு மக்களை குறிவைத்து கொன்றனர். ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டு போராளிகளை சிரியாவுக்குள் களம் இறக்கினர். ஷரியத் சட்டத்தையும் கடுமையாக அமல்படுத்தினர். சின்ன தவறு செய்தாலும் தலை கொய்யப்படும். இதுதான், ஜோலானியின் தாரக மந்திரம்.
ஜோலானி கொஞ்சம் கொஞ்சமாக சிரியாவில் தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொண்டிருந்தார். 2016 ஆம் ஆண்டு சிரியாவில் ஆசாத்தின் ஆட்சி பவர்புல்லாக இருந்தது. அவருக்கு ரஷ்யா படைகளை அனுப்பியது. ஈரான் ஷியா பிரிவு போராளிகளை சிரியாவுக்கு அனுப்பியது,. பற்றாக்குறைக்கு ஹிஸ்புல்லாவின் ஆதரவும் ஆசாத்துக்கு கிடைத்தது.
இந்த தருணத்தில் ஜோலானி அமைதி காத்தார். இட்லிப் நகரை மையமாக மட்டும் கொண்டு செயல்பட்டார் . இட்லிப் நகரின் எமிராகவும் மாறினார். சிரியன் தேசிய ராணுவத்தின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு அல் நஸ்ரா அமைப்பின் பெயரை ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (Hayat Tahrir al-Sham) என்று மாற்றிக் கொண்டார்.
அதோடு, அல்குவைதா அமைப்புடன் எந்த விதமான தொடர்பும் இனி கிடையாது என்றும் ஜோலானி அறிவித்தார். பின்னர், அமைதியாக தனது போராளிக்குழுவை பலப்படுத்தினார். வளைகுடா நாடுகள், சீனாவின் உய்குர், மத்திய ஆசிய முஸ்லிம் ஜிகாத்திகளை கொண்டு ராணுவத்தை கட்டமைத்தார். தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஷரியத் சட்டத்தின் படி, அரசு அலுவலகங்களை உருவாக்கினார்.
துருக்கியின் லிரா நாணயமே இவரது ஆட்சிக்குட்பட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேல், அமெரிக்க நாடுகளை ஜோலானி எதிரிகளாக பார்த்தாலும் அவர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்காததால், இஸ்ரேல் இவரை குறி வைக்கவில்லை.

கடந்த ஒரு வருட காலமாக இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை போட்டு பொளந்து எடுக்க, அந்த அமைப்பு பலம் இழந்தது. ஈரான் நாடும் இஸ்ரேல் தாக்குதலில் முக்கிய தளபதிகளை இழந்து பலம் குன்றி காணப்பட்டது. ரஷ்யா உக்ரேனுடன் சண்டையிடுவதில் மும்முரம் காட்டியது.
இந்த தருணத்தில் சிரிய அதிபர் ஆசாத்தின் கரம் வலுவிழந்து இருப்பதை ஜோலானி புரிந்து கொண்டார். டமாஸ்கஸ்சை வீழ்த்த லட்டு மாதிரி வாய்ப்பு இனிமேல் கிடைக்காது என்பதை உணர்ந்த ஜோலானி தனது படையினரை டமாஸ்கஸ் நோக்கி நகர உத்தரவிட்டார். நவம்பர் 27 ஆம் தேதி போரை தொடங்கிய Hayat Tahrir al-Sham அமைப்பு, தற்போது தலைநகர் டமாஸ்கஸை முழுமையாக கைப்பற்றி ஆசாத்தை அவரது தாய் நாட்டை விட்டு ஓட வைத்து விட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
“டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” – ஸ்டாலின்
பாகிஸ்தான் போலீசில் முதன்முறையாக இந்து… யார் இந்த ராஜேந்திர மேவார்?