பணி நேரம் நீட்டிப்பு, ஊக்கத் தொகை குறைப்பு ஆகியவற்றை எதிர்த்து ஸ்விக்கி ஊழியர்கள் சென்னையிலிருந்து பெங்களூரு வரை நடைபயணம் செல்கின்றனர்.
ஸ்விக்கி ஊழியர்களுக்கான பழைய விதிமுறைகளின்படி காலை 6 மணிக்கு பணியைத் தொடங்கி இரவு 9 மணி வரை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாராந்திர ஊக்கத் தொகையாக ரூ.2500 மற்றும் பெட்ரோல் தொகையாக ரூ.460 என்று வாரத்திற்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை அவர்களுக்கு சம்பளமாக கிடைக்கிறது.
ஸ்விக்கியின் புதிய விதிமுறைகள்
இந்நிலையில் ஸ்விக்கி நிறுவனம் அதன் விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. அதன்படி, காலை 5.30 மணிக்கு பணியைத் தொடங்கி இரவு 11 மணி வரை பணியாற்ற வேண்டும்.
இந்த நேரம் 4 ஷிஃப்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை, மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக பணிச் சுமை ஏற்படுகிறது. வாராந்திர ஊக்கத்தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஊக்கத் தொகை ரத்து, பணி நேரம் மாற்றம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு டெலிவரி ஊழியர்கள் சென்னையில் கடந்த 5 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பெட்ரோல்-க்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் புதிய விதிமுறைகளின்படி ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு 3 ரூபாய் வழங்கப்படவுள்ளது
ஊழியர்கள் நடைபயணம்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இன்று (செப்டம்பர் 23) சென்னையிலிருந்து பெங்களூருவில் உள்ள ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு நடைபயணம் சென்று கொண்டிருக்கின்றனர்.
200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர். புதிய விதிமுறைகளைக் கைவிட்டு, பழைய விதிமுறைகளை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.
மேலும், சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் பெங்களூருவில் உள்ள தலைமை அதிகாரிகளுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் இந்த நடைப்பயணத்தை நடத்தி வருகிறார்கள்.
சீமான் கண்டனம்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்விக்கியின் புதிய விதிமுறைகளுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்விக்கி, சொமேடோ, அமேசான், ஓலா, ஊபர் போன்ற இணையவழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஸ்விக்கி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொடுத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மோனிஷா
’நித்தம் ஒரு வானம்’ டீசர் என்ன ஸ்பெஷல்!
”95% வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே?” நேரில் சென்ற எம்.பி.க்கள் அதிர்ச்சி!