வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர்!
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட் ) என்ற பெருமையைப் பெற்ற சுரேகா யாதவ் தற்போது ’வந்தே பாரத்’ ரயிலை இயக்கிய முதல் பெண்மணி என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்தவர் சுரேகா யாதவ். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு தனது 23ம் வயதில் முதன்முறையாக ரயிலை இயக்கி ’ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்’ என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (சிஎஸ்எம்டி) வரை சுரேகா யாதவ் வந்தே பாரத் ரயிலை இன்று (மார்ச் 14) இயக்கினார்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/8WqYhaYJ-image.jpg)
இதன்மூலம் இந்திய ரயில்வேயின் நவீன அடையாளமாக பார்க்கப்படும் ’வந்தே பாரத்’ ரயிலை இயக்கிய முதல் பெண்மணி என்ற சாதனையும் சுரேகா யாதவ் வசம் வந்துள்ளது.
மேலும் சோலாப்பூரிலிருந்து 450-கிமீ தூரமுள்ள இந்த நீண்ட பயணத்தில் திட்டமிட்ட வருகை நேரத்தை விட ஐந்து நிமிடங்கள் முன்னதாக சிஎஸ்எம்டி நிலையத்திற்கு வந்தே பாரத் ரயிலை கொண்டு வந்து வெற்றிகரமாக நிறுத்தினார் சுரேகா. ரயில் 8வது நடைமேடையில் நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு ரயில்வே அதிகாரிகளால் அவர் கெளரவிக்கப்பட்டார்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/RmSL7OzT-image-1024x682.jpg)
இதுகுறித்து இந்திய ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் சுரேகாவை பாராட்டியுள்ளது. “வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் லோகோ பைலட் ஆனதன் மூலம் யாதவ் இந்திய ரயில்வேயின் தொப்பியில் மற்றொரு இறகைப் பதித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.
யாதவின் சாதனையை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “வந்தே பாரத் பெண்களின் ஆற்றலைக் கொண்டு இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் லோகோ பைலட் திருமதி சுரேகா யாதவ்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/5rJc1A6S-image-1.jpg)
கடந்த மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பை – புனே டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரயிலை சுரேகா யாதவ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு: தமிழ்நாடு அரசு
ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது நடவடிக்கை கூடாது : நீதிமன்றம்!