லீ மெரிடியன் ஓட்டல்களை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவு சரிதான் என்று உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 19) உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவையில் லீ ராயல் மெரிடியன் ஓட்டல்களை பழனி ஜி.பெரியசாமியின் அப்பு ஓட்டல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஹோட்டல்கள் நஷ்டமடைந்ததால் திவாலாகும் நிலை ஏற்பட்டது. எனவே ஹோட்டலின் சொத்துகளை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நடைபெற்ற ஏலத்தில் ரூ.423 கோடி மதிப்பில் லீ மெரிடியன் ஓட்டல்களை சொத்துக்களை சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமம் கையகப்படுத்த தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் லீ மெரிடியன் ஹோட்டலின் சொத்து மதிப்பு 1600 கோடி ரூபாய் என்பதால் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் (NCLAT) லீ மெரிடியன் இயக்குனர் பழனி பெரியசாமி மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு விசாரணையில், லீ மெரிடியன் ஓட்டல் சொத்துகள் குறைத்து மதிப்பிடப்பட்டதை ஏற்றுக்கொண்ட தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 423 ரூபாய் கோடி மதிப்பில் சொத்துக்களை கையகப்படுத்தும் உத்தரவுக்கு தடைவிதித்து கடந்த 2021ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் மேலாண் இயக்குநர் ராஜ கோபாலன் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, விக்ரமநாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ’நியாயமற்ற முறையில் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எம்.ஜி.எம் ரூ.423 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது’ என்று லீ மெரிடியன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ”சென்னை, கோவை லீ ராயல் மெரிடியன் ஓட்டல்களை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் அதிபர் ராஜ கோபாலன் கையகப்படுத்துவதை ரத்து செய்த தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவு சரிதான்” என்று தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் ராஜ கோபாலனின் மறு ஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
’பெரியார், காமராஜர், அண்ணா வாழ்ந்த தமிழ்நாடா இது?’: பா.சிதம்பரம் வேதனை!