அரசு ஊழியர்கள் மீது பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 6) தீர்ப்பளித்துள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 197- கீழ் அரசு அதிகாரி மீது வழக்குத் தொடர அமலாக்கத்துறை முறையான முன் அனுமதி பெறவில்லை என்ற காரணத்திற்காக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிபு பிரசாத் ஆச்சார்யாவுக்கு எதிரான பணமோசடி வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 6) தீர்ப்பளித்தது.
சிஆர்பிசி-இன் பிரிவு 197 அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு முன், சம்பந்தப்பட்ட அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறது.
இந்தநிலையில், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (பிஎம்எல்ஏ) இன் கீழ் பணமோசடி வழக்குகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று இன்று தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பிஎம்எல்ஏ சட்ட விதிகளை நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். CrPC இன் பிரிவு 197(1) இன் விதிகளுக்கு முரணான எந்த விதியும் அதில் இருப்பதை நாங்கள் காணவில்லை. எனவே, சிஆர்பிசியின் பிரிவு 197(1) இன் விதிகள் பிஎம்எல்ஏவின் பிரிவு 44(1)(பி) பிரிவுக்கு பொருந்தும். எனவே அரசு ஊழியர்கள் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதற்கு முன்பாக அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: விஜய்க்கு அதிக சீட்டுகள்… விட்டுத்தர தயாராகும் எடப்பாடி
இந்திய உணவுக் கழகத்துக்கு ரூ.10,700 கோடி நிதி… அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!