மணிப்பூர் விவகாரம்: மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைப்பு!

Published On:

| By christopher

மணிப்பூர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி மெய்தி – குக்கி பழங்குடியினர் இடையே மோதல் வெடித்தது.

பின்னர் கலவரமாக மாறிய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இதுவரை 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த மாதம் 20ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மெய்தி இன இளைஞர் கும்பல் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.

மே 4 நடந்த இந்த கொடூர சம்பவம் சுமார் 80 நாட்களுக்கு பிறகு உலகிற்கு தெரிந்த நிலையில் அந்த வீடியோ நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் கடந்த 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ”மணிப்பூர் வன்முறை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில் கூட தாமதம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து வன்முறை நீடிக்கும் நிலையில் கடந்த 2 மாதங்களாக மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. அரசால் மக்களைக் காப்பாற்ற இயலவில்லை என்றால் அவர்கள் எங்கு செல்வார்கள்?” எனத் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

மேலும், மணிப்பூர் மாநில டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

அதன்படி மணிப்பூர் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மணிப்பூர் மாநில டிஜிபி நேரில் ஆஜரானார். மேலும் இதில் மணிப்பூர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிபிஐ விசாரணைக்கு வழக்குகளை மாற்றியது குறித்த தகவல்கள் அடங்கிய பிரமாண பத்திரம் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரத்தில் மனுதாரர்கள் தரப்பில் இருந்தும் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதத்தை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,  மணிப்பூர் விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்கவும், நம்பிக்கை உணர்வை வளர்க்கவும் மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் (ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி)  தலைமையில் முன்னாள் நீதிபதிகள் ஷாலினி ஜோஷி முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி), ஆஷா மேனன் (முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த குழுவானது நிவாரணம், நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகள், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் மறுசீரமைப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்யும் “பரந்த நோக்கம் கொண்டதாக இருக்கும்.

அதேபோன்று வன்முறை வழக்குகளை விசாரிக்க 42 சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும்,  வெளிமாநிலத்தை சேர்ந்த டி.ஐ.ஜி. நிலை அதிகாரிகள் இந்த சிறப்பு விசாரணையை கண்காணிப்பார்கள் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சாதாரண கைதிகளுடன் இம்ரான் கான்: கோபத்தில் தொண்டர்கள்!

அமலாக்கத் துறை வசம் செந்தில் பாலாஜி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel