ரூ.40 கோடி ஏமாற்றிய ஆம்ரபாலி: தோனிக்கு கோர்ட்டு நோட்டீஸ்!

இந்தியா

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆம்ரபாலி குழுமத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக தோனிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூலை 25) நோட்டீஸ் அனுப்பியது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல வீரரான தோனியை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்க நிறுவனங்கள் போட்டியிடுவது உண்டு. அவரும் ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு தோனியை தங்களது நிறுவனத்தின் விளம்பர தூதராக ஆம்ரபாலி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. 2016ம் வரை 6 ஆண்டுகள் அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார் தோனி.

அதனைத் தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது ஆம்ராபாலி நிறுவனம். விளம்பரத் தூதராக இருந்த தோனிக்கு நிலுவை தொகையான ரூ.40 கோடியை கொடுக்கவில்லை. ஒப்பந்தத்தின்படி, ராஞ்சியில் கட்டி தருவதாக கூறிய பங்களா வீட்டையும் கட்டிதரவில்லை ஆம்ராபாலி நிறுவனம். இதனையடுத்து 2019ம் ஆண்டு ஆம்ரபாலி நிறுவனத்திடம் இருந்து 40 கோடி ரூபாயை பெற்றுத்தருமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஆம்ரபாலி நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு ஒன்றினை தாக்கல் செய்தார் தோனி.

இந்தசூழலில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியைப் பெற்ற ஆம்ரபாலி குழுமம் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்தது. ஆனால் குறித்த காலக்கெடுவுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. இதுகுறித்து பணம் செலுத்தியவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் வீடு வாங்கும் ஆசையில் ஆயிரக்கணக்கான மக்கள் மொத்தம் ரூ.2,647 கோடி செலுத்தியுள்ளார்கள் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2019ம் ஆண்டில் ஆம்ராபாலி குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் அனில் குமார் சர்மா, குழும உறுப்பினர்கள் ஷிவ பிரியா, மோகித் குப்தா உள்ளிட்டோருக்கு எதிராக 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று(ஜூலை 26) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுமானச் செலவு மற்றும் வட்டிச் செலவில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கு நிதி தேவைப்படும். அதற்காக வீடு முன்பதிவு செய்தவர்களிடம் சதுர அடிக்கு ரூ.200 என கூடுதல் தொகையை டெபாசிட் செய்யும்படி கேட்கப்படும். அந்த நிதி பயன்படுத்தப்படாவிட்டால், ஒட்டுமொத்த திட்டப்பணிகள் முடிந்தவுடன் அவர்களுக்குத் திருப்பித் தரப்படும். ஆனால் ஆம்ரபாலியில் வீடு வாங்க முதலீட்டாளர்கள் முன்பதிவு செய்ததில் இருந்து கட்டுமான செலவு அதிகரித்ததால், நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது என ஆம்ராபாலி குழுமம் தரப்பில் வாதிடப்பட்டது.

கட்டுமானத்தில் ஏற்படும் நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க சதுர அடிக்கு ரூ. 200 வீதம் கூடுதல் தொகை மக்களிடம் இருந்து பெறப்படும் என்ற ஆம்ரபாலி தரப்பு வாதத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆம்ரபாலி மற்றும் அதன் இயக்குநர்களின் பயன்படுத்தப்படாத சொத்துக்களை விற்று ரூ.700 கோடி நிதியை எவ்வாறு ஏற்பாடு செய்யலாம் என்பதை ஆராயுமாறு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதன்மூலம் ஆம்ராபாலி குழுமத்தில் வீடு வாங்குபவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் தேவையில்லாத சுமையை சுமக்க கூடாது. என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதுபோன்று, ஆம்ரபாலி குழுமத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தோனி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கும் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இதுகுறித்து தோனிக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நிலையில் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *