தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
திருமணமான ஆண்களின் நலனுக்காக தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 3) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
குடும்ப வன்முறைக்கு ஆளான திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ‘ஆண்களுக்கான தேசிய ஆணையம்’ அமைக்க கோரி வழக்கறிஞர் மகேஷ் குமார் திவாரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் விபத்து மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டியிருந்தார்.
”2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில் 81,063 திருமணமான ஆண்கள், 28,680 திருமணமான பெண்கள். அதில், 33.2% ஆண்கள் குடும்பப் பிரச்சனைகளாலும், 4.8% திருமணம் தொடர்பான பிரச்சனைகளாலும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், திருமணமான ஆண்கள் தற்கொலை சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களின் புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்க உத்தரவிடக்கோரியும் மனுதாரர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்கும் வரை, ஆண்கள் அளிக்கும் புகார்களை போலீசார் ஏற்று மாநில மனித உரிமை ஆணையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 3) உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “நீங்கள் ஒருதலைபட்சமாக விஷயத்தை சித்தரிக்க முயற்சி செய்கிறீர்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை குற்றவியல் சட்டம் கவனித்துக்கொள்கிறது. இந்த வழக்கை பரிசீலிப்பதில் விருப்பமில்லை” என்று தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க மறுப்பு தெரிவித்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மோனிஷா
முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் எப்போது? அப்பல்லோ
அப்பல்லோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் : என்னாச்சு?