ஒரு பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 17) மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒரு பாலின திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
விசாரணை நிறைவடைந்த நிலையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ரவீந்திர பட், பிஎஸ். நரசிம்மா, ஹிமா கோஹ்லி, சஞ்சய் கிஷன் கவுல் ஆகிய நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் ஒரு பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 தீர்ப்புகள் வழங்கியுள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பை வாசித்தார். அப்போது, “திருமணம் என்பது ஒரு நிலையான திருமண சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய திருமண சீர்திருத்தங்களை சட்டங்கள் மூலமே மேற்கொள்ள முடியும்.
திருமண முறையில் சட்டப்படியே பல்வேறு மாற்றங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல.பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது.
ஆனால், நீதிமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது. நாடாளுமன்றம்தான் சட்டத்தை இயற்ற வேண்டும். திருமண சட்ட சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்.
ஒரு பாலின திருமணம் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு திருநங்கையின் திருமணம் சட்டத்தால் அங்கீகரிப்பட்டுள்ளது. அவரால் ஒரு பாலின உறவில் இருக்க முடியும் என்பதால் அத்தகைய திருமணங்கள் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம்.
ஒருபாலின நபர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
பிற குடிமக்களைப் போலவே ஒரு பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் மற்றவர்களைப் போல சமமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்பது உள்ளது. அதன்படி அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
ஒரு பாலின ஜோடிகளுக்கான ரேஷன் அட்டை வழங்குவது உள்ளிட்ட அரசின் சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதனையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான மாற்றுப் பாலினத்தவர் திருமணம் மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தினுடைய 2 பக்கங்களாகப் பார்க்க வேண்டும்.
நாட்டில் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள்- ஓரின சேர்க்கையாளர்களுக்கு பல்லாண்டுகளாக அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை சரி செய்யக் கூடிய தருணம் இது.
தன் பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ளுதல் உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். தன்பாலினத்தவர் மீதான பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட திருத்தம் தேவை” என்று தலைமை நீதிபதி தீர்ப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து நீதிபதி ரவீந்திரா பட், “தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன். அவரது தீர்ப்பில் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்தும் மாறுபடுகிறேன்.
ஒரு பாலின திருமணம் தொடர்பான சட்டம் இல்லாமல் அதனை அங்கீகரிக்க முடியாது. ஒரு பாலின ஈர்ப்பாளர்கள் தங்களது துணையை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. ஆனால் அதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுகளுக்கு இல்லை” என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஹீமா கோலி ஆகியோரும் இந்த விவகாரத்தில் நீதிபதி ரவீந்திரா பட் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்கள்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் ஒரு பாலின திருமணத்துக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தார்கள். ஐவருமே இது நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டிய விவகாரம் என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அதிமுகவின் முதல் பொதுக்கூட்டம்… ஆசிட் மிரட்டலுக்கு இடையே எப்படி வந்தார் எம்.ஜி.ஆர்?
அதிகாலைக் காட்சி: உயர்நீதிமன்றம் மறுப்பு- மீண்டும் அரசிடம் பேசும் லியோ தரப்பு!