தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் குறித்து மத்திய அரசுக்கு உச் சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
தேர்தல் ஆணையர் நியமனங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வரக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 23) உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்தது குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று (நவம்பர் 24) தாக்கல் செய்தது.
நீதிபதி ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நீதிபதிகள், “நவம்பர் 18 தேதி தனது ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற கோயல், நவம்பர் 19 அன்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு நவம்பர் 21 அன்று பொறுப்பேற்கிறார்.
தேர்தல் ஆணையர் பதவி காலியிடம் மே 15 முதல் உள்ளது. அருண் கோயல் நியமனக் கோப்பு நவம்பர் 18 அன்று மத்திய அரசிடம் வருகிறது. அன்றைய தினமே பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெறும் 24 மணி நேரத்தில் அருண் கோயலை எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது.
முறையான செயல்முறைகளுடன் அருண் கோயல் பெயர் பரிசீலிக்கப்பட்டதாக தெரியவில்லை.
பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை சரியாக பின்பற்றப்பட்டதா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
நீங்கள் ஒரு நாணயத்தை தூக்கி எறிந்தால் இருபுறமும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நினைக்க கூடாது.
தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட ஐந்து பேரில் அருண் கோயல் மிகவும் இளையவர். அவரை எந்த அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்தீர்கள்” என்று கேள்விகளை எழுப்பினர்.
நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, “அனைத்து ஆவணங்களையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும். அருண் கோயல் முறையாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தவறு எதுவும் நடைபெறவில்லை” என்று வாதிட்டார்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் 5 நாட்களுக்குள் மத்திய அரசு அருண் கோயல் நியமனம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
செல்வம்
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
சீதை போல தீக்குளிக்கத் தயார்: காயத்ரி ரகுராம்