supreme court orders karnataka

காவிரி விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்தியா

வறட்சி கால அட்டவணைப் படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 21)உத்தரவிட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருவதும், தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான நதிநீர் பங்கை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிடவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ”காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் போதாது, 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கனவே ஆகஸ்ட் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, உத்தரவின்படி தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டதா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகினர்.

”காவிரியில் சொற்ப நீரைத்தான் கர்நாடக அரசு திறந்து விடுகிறது. வினாடிக்கு 12,500 கன அடி நீரை கர்நாடகா திறக்க உத்தரவிட வேண்டும்” என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசு சார்பில், “கர்நாடகாவில் மழை இல்லை. காவிரியில் நீரும் குறைவாக தான் இருக்கிறது” என்று பதில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசிற்காக ஆஜரான வழக்கறிஞர் ரோத்தகி “கர்நாடகாவில் மழை குறைவுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மழை குறைவான காலத்திற்கான நீர் பகிர்வு விவரம் என்பது ஏற்கனவே உள்ளது. அதை நீதிமன்றமும் வரையறுத்துள்ளது. அந்த நீரை கூட ஏன் கர்நாடக அரசு திறந்துவிட வில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஆணையம் திறந்து விட ஆணையிடும் நீரின் அளவை விட கர்நாடக அரசு குறைவான தண்ணீரை தான் திறந்துவிடுகிறது. எனவே கர்நாடக அரசு நீர் திறந்து விடுவதை கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு, ”நீர் பற்றாக்குறை இருப்பதால் தண்ணீர் திறக்க இயலாது என பிரமாணப் பத்திரம் அளித்துள்ளோம்” என கர்நாடக அரசு தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். அதே போல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கர்நாடகா அரசின் கோரிக்கையும் நிராகரித்தனர்.

வறட்சி கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் காவிரியில் இருந்து எவ்வளவு நீர் திறக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மோனிஷா

கொடநாடு விமர்சனம்…  எடப்பாடி பற்றி பேச உதயநிதிக்குத் தடை: உயர் நீதிமன்றம்

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *