SC order on archagas appointment

அர்ச்சகர்கள் நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியா

ஆகம விதிகளை பின்பற்றும்‌ கோயில்களில்‌ அர்ச்சகர்கள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம்‌ இன்று (செப்டம்பர் 25) உத்தரவிட்டுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய சிவாச்சாரியார்கள்‌ சேவா சங்கம்‌ சார்பில்‌ வழக்கறிஞர் ஜி.பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாட்டில் உள்ள ஆகம கோயில்களில் அரச்சர்கள் நியமனம், பயிற்சி உள்ளிட்டவைக்கு சேஷம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி அரசு செயல்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து ஆகம கோயில்களில் கட்டாயமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “தமிழ்நாடு அரசு தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றை செய்து வருகிறது. இது சட்டவிரோதமானது” என்று வாதிட்டார்.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்றை அரசு மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும்.

இந்த மனுக்கள் தொடர்பாக 3 வாரங்களுக்குள்‌ இந்து அறநிலையத்‌ துறை மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்‌.

இது தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

யார் பொறுப்பு?

அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் சமூக ஆர்வலர் மருதையன் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினையும், தமிழ்நாடு அரசின் அணுகுமுறையையும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் 22.8.22 தீர்ப்பு மீது அப்பீல் செய்யுமாறு பலமுறை வலியுறுத்தினோம்.  மேலும் வழக்கு பின்னடைய என்ன காரணமென்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விளக்கினோம். ஆனால் எதற்கும் பயனில்லை.

இந்த தோல்விக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலர், HR&CE சட்டத்துறை, அரசு வழக்கறிஞர் தான்  பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா
+1
0
+1
0
+1
6
+1
1
+1
2
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *