மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து 22ஆம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரியின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய நான்கு அணைகளை கர்நாடக அரசு கட்டியுள்ளது. இதனால் தமிழகத்தில் காவிரி நீர்வரத்து தடைபட்டு உள்ளது. இந்நிலையில் மேகதாது பகுதியில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
மேகதாது என்ற புதிய அணைக்கான சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டுமென்றால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். இந்தசூழலில் மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆணைய கூட்டத்தில் பேசப்படும் என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறினார். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜூன் 17, 23 மற்றும் ஜூலை 6ம் தேதிகளில் நடக்க இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை வரும் 22ம் தேதி நடக்க இருக்கிற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7ம் தேதி தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டிருந்தது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து கர்நாடக அரசின் வாதங்களையும் கேட்ட நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு, மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க கூடாது. தமிழக அரசின் மனு தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2018ம் ஆண்டில் இருந்து பிரச்சனை இருந்து வருகிறது. வழக்கை ஒருவாரம் ஒத்தி வைப்பதால் ஒன்றும் ஆகிவிடாது என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
மேலும் மேகதாது அணை குறித்து வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தினை தள்ளி வைக்க வேண்டும் என்ற தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
கிறிஸ்டோபர் ஜெமா