பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 11 பேர் விடுதலையை எதிர்த்த வழக்கில் குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002இல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகளை, சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) குஜராத் அரசு நன்னடத்தை அடிப்படையில் விடுவித்தது.
இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஎம் தலைவர் சுபாஷினி அலி மற்றும் கபில் சிபல் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி. மகுவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
என்ன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்?
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி ரமணா மற்றும் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதத்தையும் நீதிபதிகள் கேட்டனர்.
அதனைத் தொடர்ந்து ”பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட தகுதியுடையவர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா