கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 25) தீர்ப்பளித்துள்ளது.
கனிமவளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமையை எதிர்த்து கனிம வள நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய ஒன்பது நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், அபய் எஸ் ஓகா, ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகிய எட்டு நீதிபதிகள் கனிம வளங்களுக்கு மாநில அரசுகளுக்கு வரி விதிக்க உரிமை உள்ளது என்றும் நீதிபதி பிவி நாகரத்னா மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதிபதி சந்திரசூட் தீர்ப்பை வாசிக்கையில், “246-ஆவது சட்டத்தில் ஏழாவது அட்டவணையில் எண்ட்ரி 49-ல் நிலங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு வரி விதித்தல் சட்டப்பிரிவின் கீழ் கனிம வளங்களுக்கு வரிவிதிக்கவும், சட்டமியற்றும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கே உள்ளது. மத்திய அரசு அந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது” என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி நாகரத்னா, “கனிம வளங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை” என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதீப் ரங்கநாதன் பட பெயர் மாற்றம்!
தமிழகம், மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகா… நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்!