புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி கைதான யூடியுபர் மணிஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 21) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இது நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், பின்னர் பீகார், தமிழ்நாடு காவல் துறையினரால் அவை போலி வீடியோக்கள் என்று கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் யூடியூபர் மனிஷ் காஷ்யப், தன் மீது பதியப்பட்ட பல்வேறு வழக்குப்பதிவுகளை இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காஷ்யப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த்தா தவே, ”காஷ்யப்பிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட யூடியூபர் மீது தமிழ்நாட்டில் ஆறு மற்றும் பீகாரில் மூன்று எஃப்ஐஆர்கள் உள்ளன.” என்று தெரிவித்தார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், “மணீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது ஏன்?” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டார்.
அதற்கு, ”தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியுள்ளார். அவரை 60 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அவர் ஒரு அரசியல்வாதி. தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர் பத்திரிக்கையாளர் அல்ல”.” என்று கபில் சிபல் வாதிட்டார்.
இதனையடுத்து பீகார் அரசுத்தரப்பு வாதத்தில், “மணிஷ் காஷ்யப் தொடர்ந்து குற்றம் இழைத்துள்ளார்; அவர் மீது பிரிவு 307 உட்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன.” என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மதுரை சிறையில் இருந்து மணிஷ் காஷ்யப்பை வேறு எங்கும் அழைத்துச் செல்லக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
வருவாய் பற்றாக்குறை ரூ.30,000 கோடியாக குறைப்பு: முதல்வர்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? : முதல்வர் ஆவேசம்
தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சி; செய்தியைப் படித்ததும் “அடச்சே” என்றாகிப் போச்சு. தலைப்பை கொஞ்சம் நிதானமா, அதிர்ச்சி தராம வைங்கப்பா…