கருகலைப்பு தொடர்பான வழக்கு விசாரணையில் இடையூறு செய்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு கடுமையான கண்டனங்களை உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 21) தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமையால் தனக்கு உருவாகியுள்ள 27 வார கருவை கலைக்க அனுமதி வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 19ஆம் தேதி மனு அளித்தார்.
மேலும் இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய உத்தரவின் நகல் கிடைப்பதற்கு தாமதமாகி வருவதால் கருக்கலைப்பு செய்ய முடியாமல் 27 வாரமாகி விட்டது. இதனால் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, ’பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்து கருக்கலைப்பு செய்ய முடியுமா?’ என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 21) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், குஜராத் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவ குழு பரிந்துரைத்து அறிக்கை தாக்கல் செய்தது.
இதனை ஏற்றுக்கொண்டு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் மனுதாரர் இன்று அல்லது நாளை காலை 9 மணிக்குள் மருத்துவமனையில் சேர வேண்டும் என்றும், கருக்கலைப்பின் போது குழந்தை உயிருடன் இருந்தால், அதை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு கண்டனம்!
அதேவேளையில் விசாரணையில் இடையூறு செய்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு கடுமையான கண்டனங்களை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருக்கலைப்பு விவகாரத்தில் கடந்த 19ஆம் தேதி உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு பிறகு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் இந்த வழக்கு தொடர்பாக ஒத்திவைப்பு உத்தரவை பிறப்பித்து இருந்தார்.
இதனை குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு,
“குஜராத் உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றமும் அதன் மேல் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது. இது அரசியலமைப்புத் தத்துவத்திற்கு எதிரானது.
குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக செயல்படுகிறார்களா? ஏன் இவ்வாறு தேவையற்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முந்தைய உத்தரவில் இருந்த எழுத்து பிழையை சரிசெய்வதற்காக மட்டுமே உயர்நீதிமன்றம் புதிய உத்தரவிட்டது என்றும், இது தவறான புரிதல் என்றும் கூறினார்.
மேலும் “மாநில அரசு என்ற வகையில் நாங்கள் உத்தரவை திரும்பப் பெற உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை விடுப்போம்” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
காவிரி நீர் விவகாரம்: தமிழ்நாடு அரசின் மனு ஏற்பு!
குஜராத்ல என்னதான் நடக்குதுனு நாட்டு மக்களுக்கும் புரியல; சுப்ரீம் கோர்ட்டுக்கும் புரியல. ராகுல்காந்தி விவகாரம் முதல் மத்த எல்லா வழக்குகளுக்கும் குஜராத்ல தனி சட்டம் எதும் இருக்குதோ?