உச்சநீதிமன்றம் தடை செய்த நூற்றுக்கணக்கான பிஎஸ் 4 (BS என்பது Bharat stage) வாகனங்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்-ஐவி வாகனங்களுக்கு தடை
காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை பிஎஸ் 4 வாகனங்கள் பூர்த்தி செய்யாததால் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிஎஸ் வாகனங்களுக்குத் தடை விதித்தது.
இந்த தடை 2020 ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது. இதனால் பிஎஸ் 4 வாகனங்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள், அவற்றை விற்பனை செய்ய முடியாமல் தவித்தன.
பின்னர் நூதன முறையில் முறைகேடாகக் கள்ளச் சந்தையில் வாகன வியாபாரிகள் ரூ.10 முதல் ரூ.13 லட்சம் வரை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆர்டிஓ அலுவலக ஊழியர்களுடன் இணைந்து இதுபோன்ற வாகனங்களின் ஒரு பகுதி சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வாகனங்களை வாங்குபவர்கள், தடை செய்யப்பட்ட வாகனங்கள் என்று தெரியாமலேயே வாங்கியுள்ளனர்.
சட்டவிரோத வாகனப் பதிவு
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பிஎஸ் 4 வாகனங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டறிந்த தமிழகப் போக்குவரத்துத் துறை, மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (ஆர்டிஓ) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
குறைந்தது 315 பிஎஸ் 4 வாகனங்கள், விளையாட்டுப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் சொகுசு இரு சக்கர வாகனங்கள், நவம்பர் 2020 மற்றும் செப்டம்பர் 2022க்கு இடையில் வளசரவாக்கத்தில் உள்ள தென் சென்னை ஆர்டிஓ அலுவலகத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
315 வாகனங்களின் சந்தை மதிப்பு தோராயமாக ரூ.68 கோடி முதல் ரூ.75 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் 23 லட்சம் ரூபாய் வரை சாலை வரி ஏய்ப்பும் நடைபெற்றுள்ளது.
ஆர்டிஓ அதிகாரிகள் சிலர் மற்றும் ஸ்மார்ட் பதிவு அட்டைகளை வழங்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் இந்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
வெளிச்சத்திற்கு வந்த மோசடி
இரண்டு மாதங்களுக்கு முன்பு எஸ்யூவி வாகனத்தின் உரிமையாளர் ஒருவர் பெயர் மாற்றத்திற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
ஆர்டிஓ ஊழியர்கள் பயன்படுத்தும் வாஹன் மென்பொருளில், அவரது வாகன விவரங்கள் குறித்து அறிய முடியாததால், அவரிடம், ’முதலில் வாகனத்தை எங்கே பதிவு செய்தீர்கள்’ என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
பின்னர் விசாரணையில், வாகனத்தைப் பதிவு செய்யும் போது, வாகனத்தின் இன்ஜின் எண் மற்றும் சேஸ் எண் குறித்த விவரங்கள் கையாளப்பட்டு, தவறான உற்பத்தியாளர் விவரங்கள் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
ஆர்டிஓ ஊழியர்களுக்கு மட்டுமே அணுகல் வழங்கப்பட்ட மென்பொருளில் பேக்லாக் ஆப்ஷனைப் பயன்படுத்தி இந்த முறைகேடு நடந்துள்ளது.
“பிற மாநில வாகனங்களின் மறுபதிவு முறையை பயன்படுத்தி ஆர்டிஓ ஊழியர்கள் வாஹன் மென்பொருளில் பிஎஸ் 4 வாகனங்களுக்கான பதிவுகளை உருவாக்கியுள்ளனர். பதிவு, இன்ஜின் மற்றும் சேஸ் எண்களை அவர்கள் கையாடல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஜூலை 2020 இல், கொரோனா ஊரடங்கு காலத்தில் பிஎஸ் 4 வாகனங்களைப் பதிவு செய்வதற்கு 10 நாட்கள் தளர்வு வழங்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பிஎஸ் 4 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த விவரங்கள் வாஹன் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படவில்லை” என்று தெரியவந்துள்ளது.
கிரிமினல் நடவடிக்கை
இதைத் தொடர்ந்து வளசரவாக்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் போக்குவரத்து கமிஷனர் எல்.நிர்மல்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓக்களிலும் உள்ள பதிவேடுகளை விரிவாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்ததும், இந்த வாகனங்கள் அனைத்தும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, தவறு செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மோனிஷா
தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு!
“பட்டினியின்மை எனும் இலக்கு எட்டப்பட்டுள்ளது” – மு.க.ஸ்டாலின்