மல்யுத்த வீரர்கள் இன்று (மே 30) பதக்கங்களை கங்கையில் வீச சென்ற நிகழ்வால் அவர்களுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வந்தனர்.
இந்த நிலையில் மே 28 ஆம் தேதி நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தர தரவென இழுத்து சென்று கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பேசுபொருளானது.
இந்த நடவடிக்கைக்குப் பலரும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நாட்டிற்காக தாங்கள் பெற்ற பதக்கங்களை மத்திய அரசிடம் ஒப்படைப்பதை விட புனிதமான கங்கையில் வீசுவதாக இன்று அறிவித்தனர்.
அதற்காக இன்று மாலை 6 மணியளவில் பதக்கங்களுடன் மல்யுத்த வீராங்கனைகள் ஹரித்துவாருக்கு வந்தனர்.
அங்கு போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் மல்யுத்த வீரர்கள் கங்கை நதிக்கரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகைத் கேட்டுக் கொண்டதால் வீரர்கள் அவர்களது முடிவை மாற்றிக் கொண்டனர். மேலும் வீரர்களிடம் இருந்த பதக்கங்களையும் அவர் வாங்கி கொண்டார்.
ஆனால் 5 நாட்களுக்குள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யவில்லை என்றால் மீண்டும் ஹரித்துவாருக்கு வந்து பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் மல்யுத்த வீரர்களுக்கான ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அனில் கும்ளே, “மே 28 அன்று எங்கள் மல்யுத்த வீரர்கள் தாக்கப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
சரியான பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ரித்திகா சிங், “மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் நடத்தப்படும் விதத்தை பார்க்க வெட்கமாகவும் வருத்தமாகவும் உள்ளது.
அவர்கள் அவமானப்படுத்தப்படுவது மனிதமே இல்லாத செயல். வெளிநாட்டு மண்ணில் நமது நாட்டை தோள்களில் சுமந்து வெற்றி தேடித் தந்தவர்களின் பின்னால் நாம் நிற்க வேண்டும்” என்று ஆதரவு அளித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்திய மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் மூழ்கடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நீதி வெல்லும். நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு என்ன ஆச்சு?
இனி இலவச பார்க்கிங் இல்லை: மெட்ரோ நிர்வாகம்!