இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜூன் 20-ஆம் தேதி அமெரிக்காவிற்கு சென்றார். 4 நாட்கள் பயணத்தை முடித்து விட்டு இன்று (ஜூன் 24) எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவில் நேற்று கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரூ ஜாஸ்ஸி, போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி டேவிட் எல் கால்கோன் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு சுந்தர் பிச்சை பேசும்போது, “பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. குஜராத்தில் உலகளாவிய செயல்பாட்டு மையத்தை விரைவில் திறக்க உள்ளோம். டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையை மற்ற நாடுகள் பின்பற்றுகின்றன” என்று தெரிவித்தார்.
போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி டேவிட் எல் கால்கோன், “பிரதமர் மோடி இந்தியாவின் விமான போக்குவரத்தை மேம்படுத்த மிகவும் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். உலகம் முழுவதும் விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி பயணத்தில் இந்தியா குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரூ ஜாஸ்ஸி, “அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க உதவுவதிலும் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார்” என்றார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: தினை – ராகி டோக்ளா