மருத்துவர் சுப்பையா கொலையில் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று(நவம்பர் 14) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சுப்பையா கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, சென்னை ராஜா அண்ணாமலை பகுதியில் பட்டப் பகலில் மூன்று பேரால் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறை இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தது. காவல் துறை விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாகத்தான் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு சென்னை அமர்வு நீதிமன்றம், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேரி புஷ்பம் மற்றும் யேசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 7 பேருக்கு மரண தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 9 பேரும் மேல் முறையீடு செய்தார்கள். இதனைக் கடந்த ஜூன் 14ஆம் தேதி விசாரித்த எம்.எஸ். சுரேஷ் மற்றும் சுந்தர் மோகன் கொண்ட டிவிஷன் பெஞ்ச், அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, 9 பேரையும் விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்த தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டப்பகலில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரையும் எப்படி சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது என்று கேள்வி எழுப்பியது.
மேலும் இது போன்ற ஒரு தீர்ப்பை நாங்கள் கேள்விப்பட்டது இல்லை என்று கூறி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டம்!
அபிசேக்குடன் காதல்? : நிம்ரத் கவுருக்கு அமிதாப் கடிதம் எழுதியது ஏன்?
”எக்ஸ் பக்கம் ஒரு நச்சு பிளாட்பார்ம்” : வெளியேறிய ‘தி கார்டியன்’பத்திரிகை!