டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
டைட்டானிக் என்றவுடன் காதல், கப்பல், பிரம்மாண்டம் போன்ற எண்ணங்களைத் தாண்டி மர்மமும் சோகமும் தான் நம் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் உணர்வுகள். மீண்டும் அதே போன்ற ஒரு டைடானிக் மர்மம் ஒன்று அதே அட்லாண்டிக் பெருங்கடலில் அரங்கேறியுள்ளது.
டைடானிக் சிதிலங்களை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்றிச்சென்ற டைட்டன் என்னும் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போயுள்ளது.
வாஷிங்டனை சேர்ந்த ஓசன் கேட் எக்ஸ்படிசன் என்னும் தனியார் நிறுவனம் அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் சிதிலமடைந்து கிடக்கும் டைட்டானிக்கின் இடிபாடுகளை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் பொருட்டு, அவர்களை நீர்மூழ்கிக் கப்பல் வழியாக அழைத்துச் சென்று வருகிறது.
அதே போல கடந்த ஜூன் 18-ஆம் தேதி காலை நியூபவுண்ட்லேண்ட் பகுதியில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு 8 நாள் பயணமாக டைட்டன் என்னும் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டுள்ளது.
இக்கப்பலில் பைலட் உள்பட மொத்தமே 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஒரு நபருக்கான இரண்டரை லட்சம் டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங் , பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான், மேலும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பால் ஹென்றி மற்றும் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் கடலுக்கடியில் தங்கள் சுற்றுலாவைத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் அவர்கள் பயணம் தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களிலேயே அந்த நீர் மூழ்கிக் கப்பலின் ரேடார் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உடனே கனடா அரசாங்கம் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் நீர்மூழ்கி கப்பலை தேடத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் நீர்மூழ்கி கப்பலின் தடயம் இல்லாமல் போகவே அவர்கள் காணாமல் போய் உள்ள செய்தியை அமெரிக்கா, பிரெஞ்சு, உள்ளிட்ட நாடுகளுக்கு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் இவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
நீர்மூழ்கிக் கப்பலில் 96 மணி நேரங்களுக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும், ஆனால் 4 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் குறித்த எந்த தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பயணிகளின் நிலை என்ன என்பது குறித்த அச்சத்தில் தேடுதல் பணியை முடுக்கி விட்டிருக்கிறது கனடா அரசு.
அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி ஜான் மாகர் கூறும்போது,
“நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக கப்பலில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்தனர், இந்த நீர்மூழ்கி கப்பலானது ஐந்து பாகங்களாக சிதறி உள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சண்முக பிரியா, செல்வம்