உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்களை மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு பள்ளியில் அனைத்து ஆசிரியர்களையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“கொரோனா காலகட்டத்தின்போது மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உணவுக்கான உதவித்தொகை இதுவரை வழங்கவில்லை.
ஆசிரியர்களிடம் இதுகுறித்து பலமுறை கேட்டோம் ஒவ்வொரு முறையும் எங்களைப் புறக்கணித்து 2-3 மாதங்கள் கழித்து பணம் தருவதாகச் சொன்னார்கள். அதனால்தான் அனைத்து ஆசிரியர்களையும் பள்ளி அறைக்குள் அடைத்து வைத்துள்ளோம்.
உயரதிகாரிகள் வந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக்காணும் வரை இவர்களை வெளியிட மாட்டோம்” என்று கூறி போராடினர்.
மாணவர்களின் இந்தச் செயல் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிக்கு வெளியே கூட்டம் அலைமோதியது. அந்தப் பகுதி கிராமத் தலைவரும் பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் பேசி விளக்கினார்.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் அனைத்து ஊழியர்களையும் அறையை விட்டு வெளியே வர அனுமதித்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ், “முதலில் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து கிராமத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் மாணவர்கள் எங்கள் விடுவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். விரைவில் இந்தப் பிரச்சினைக்கு நல்ல முடிவு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
ராஜ்