கேரளாவில் ராகுலின் நடைப்பயணத்தின்போது, அவரைக் கண்ட சந்தோஷத்தில் மாணவி ஒருவர் கதறியழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ’பாரத் ஜோடோ யாத்ரா’ எனும்,
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.
மொத்தம் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் நடைப்பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி குமரியில் தொடங்கிய அவரது நடைப்பயணம், தமிழகத்தில் செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவுபெற்றது.
அதன்பிறகு செப்டம்பர் 11ம் தேதி முதல் கேரளாவில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல், அம்மாநிலத்தில் சில சாகசங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் 19ம் தேதி, கேரள ஆலப்புழாவில் காட்சி படகு போட்டியில் பங்கேற்று மகிழ்ந்தார். அடுத்து செப்டம்பர் 26ம் தேதி, தன்னுடைய 19வது நாள் நடைப்பயணத்தை பாலக்காட்டின் ஷோரனூரில் தொடங்கிய ராகுல், நடைப்பயணத்தினூடே சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 28) தன்னுடைய 21வது நாள் நடைப்பயணத்தை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பண்டிக்காடு பகுதியில் தொடங்கினார். அப்போது பள்ளி மாணவி ஒருவர், ராகுலைக் கண்ட சந்தோஷத்தில் தன்னையும் அறியாமல் அழ ஆரம்பித்தார்.
பின்னர் ராகுலுடன் இணைந்து நடந்த அந்த மாணவியை, தலையில் தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பகிர்ந்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, “இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அன்பு ஒன்றே” எனப் பதிவிட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
”ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும்”: காங்கிரஸ் எம்.பி
மம்தா பானர்ஜி விரைவில் கைது?: பாஜகவால் பரபரக்கும் மேற்கு வங்கம்!